ABP NADU Impact: மக்களை அச்சுறுத்திய பேருந்துகளின் ஹாரன் ஒலி.. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் - நடந்தது என்ன ?
காஞ்சிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு ஹாரன் ஒலி எழுப்புவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகரம் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பணி நிமித்தமாக அதிகளவு பொதுமக்கள் வந்து செல்லும் நகரமாகவும், கோயில்கள் நகரமாகவும், பட்டு நகரமாகவும் இருப்பதால் நாள் தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் 80,000-க்கும் மேற்பட்ட மக்களும், சுபமுகூர்த்த நாள் லிட்டர் நாட்களில் ஒரு லட்சம் வரை பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய நகரமாக இருந்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
பொதுமக்கள் வருகைக்கு ஏற்ப சாலைகள் விரிவு செய்யப்படாதது, உள்ளிட்ட காரணங்களால் எப்போதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி வருகிறது. இது போக அதிக அளவு தனியார் பேருந்துகளும் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, செஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்
இவ்வாறு இயக்கப்படும் பல தனியார் பேருந்துகள் மற்றும் ஒரு சில அரசு பேருந்துகளில், காதுகளை கிழிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அதுவும் ஒரு சில ஹாரன்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் செல்லும்போது பயன்படுத்தக் கூடிய வகையில் நகர் முழுவதும் இருக்கும் ஒரு கிலோமீட்டரில் தொடங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து ஒலி எழுப்பு கொண்டே செல்வதால், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்த செய்தி நமது ஏபிபி நாடு இணையதளத்தில் வெளியானது. மேலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வில் தனியார் பேருந்துகள் உட்பட்ட 16 வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய ஹாரன் பொருத்தப்பட்டு இருந்ததை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக அனைத்து வாகனங்களும் சேர்த்து இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 9566546083 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.