Wrestling Federation of India: இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கம் ரத்து - ஆனால், அதில் ஒரு டிவிஸ்ட்?
Wrestling Federation of India: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்க நடவடிக்கையை, ரத்து செய்வதாக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
Wrestling Federation of India: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சர்வதேச மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மல்யுத்த சம்மேளன இடைநீக்கம் ரத்து:
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படவில்லை என்பதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அந்த அமைப்பை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருந்ததால், தற்காலிக இடைநீக்கத்தை விதிக்க போதுமான காரணங்கள் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி நடைபெற்ற சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு, சில நிபந்தனைகளுடன் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் என்ன?
- இந்திய மல்யுத்த சம்மேளனம் அதன் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்.
- இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் தற்போதும் விளையாடி வரும் வீரர்கள் அல்லது குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- வாக்காளர்கள் விளையாட்டு வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
- இந்தத் தேர்தல் பயிற்சியின்போது அல்லது எந்தவொரு மூத்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போதும் நடைபெறும்.
- தேர்தலானது ஜூலை 1, 2024க்கு முன்னதாக நடத்தி முடிக்கப்பட வேண்டும்
- அனைத்து WFI நிகழ்வுகளிலும், குறிப்பாக ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் பிற முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்கான சோதனைகளில், அனைத்து மல்யுத்த வீரர்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படுவதாக WFI உடனடியாக UWW க்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.
- இந்த பாரபட்சமற்ற நடவடிக்கையில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக போராடிய மூன்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் அடங்குவர்.
- UWW குறிப்பிட்ட மல்யுத்த வீரர்களுடன் தொடர்பில் உள்ளது. எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய மல்யுத்த வீரர்கள் மீண்டும் தங்கள் நாட்டின் கொடியின் கீழ் போட்டியிட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளனது. முன்னதாக இடைநீக்கம் காரணமாக, இந்திய மல்யுத்த வீரர்கள் UWW கொடியின் கீழ் போட்டியிட வேண்டியிருந்தது. மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான், இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டது.