Punjab Gas Leak: அச்சச்சோ..! பஞ்சாப் தொழிற்சாலையில் வாயுக்கசிவு; மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 11 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் வாயு கசிவு:
தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து விரிவாக பேசிய லூதியானாவின் சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா, "நிச்சயமாக, இது ஒரு வாயு கசிவுதான். தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். 11 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்
வாயுவின் தன்மை மற்றும் அது எங்கிருந்து எப்படி கசிந்தது என்பது தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை, இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்யும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கியாஸ்புரா பகுதியில் இருந்து மக்களை காலி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
"விரைவில் மற்ற விவரங்கள் வெளியிடப்படும்"
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
போலீஸ், அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் மற்ற விவரங்கள் வெளியிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட், குளிரூட்டும் அமைப்பிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. தொழிற்சாலை அருகே வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் மயங்கி விழுந்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மூன்று குழந்தைகளுடன் ஒரு தம்பதியினர் கிளினிக்கில் இறந்து கிடந்தனர். இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து உள்ளூர்வாசியான ராம் முராத் கூறுகையில், "எனது உறவினர் சவுரவ் கோயல், 28, மற்றும் அவரது மனைவி திரிதி கோயல், சகோதரர் கௌரவ் கோயல் மற்றும் அவரது தாய் மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை வாயு கசிவில் சிக்கினர். குழந்தை அபாய கட்டத்தை தாண்டிய நிலையில், தம்பதியும் தாயும் உயிரிழந்துள்ளனர். கௌரவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.