Vande Bharat: பயணிகளே! இன்று முதல் தமிழ்நாட்டிற்கு புதியதாக 2 வந்தே பாரத் ரயில்கள் - எங்கிருந்து எங்குவரை?
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு புதிய ரயில்கள் உள்பட 3 புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மத்திய பா.ஜ.க. அரசு ரயில்வே துறையை நவீனப்படுத்தும் விதமாக வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று 3 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில்:
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் 3 புதிய வந்தே பாரத் ரயில்களில் இரண்டு ரயில்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. மதுரை – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயிலையும், சென்னை – நாகர்கோயில் இடையே புதிய வந்தே பாரத் ரயிலையும் தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமின்றி மீரட் – லக்னோ இடையேயும் புதிய வந்தே பாரத் ரயிலையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி இந்த புதிய ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே இயக்கப்பட உள்ள இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை மூலமாக வழக்கமான ரயில்களை காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றடையலாம். மேலும், மதுரை – பெங்களூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலமாக வழக்கமான ரயில்களை காட்டிலும் 1.30 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையலாம்.
எத்தனை மணிக்கு புறப்படும்?
இந்த வந்தே பாரத் ரயில்களில் உணவு உள்பட அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கப்படும். இதற்கான நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் முருகன் பங்கேற்கின்றனர். இன்று மதியம் 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு சென்றடைய உள்ளது.
ஆனால், மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு நாகர்கோயில் நோக்கி இந்த வந்தே பாரத் ரயில் புறப்பட உள்ளது. இந்த ரயில் நள்ளிரவு 1.50 மணிக்குச் சென்றடைய உள்ளது. நாகர்கோயிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளது. மதுரையில் இருந்து பெங்களூருக்கு மதியம் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்குச் சென்றடைகிறது.