OPS About Sabareesan: சபரீசனை சந்தித்தது ஏன்? டி.டி.வி. முன்னிலையில் மனம் திறந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்:
அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருந்தார். இதில், சபரீசன் சிஎஸ்கே டி-ஷர்ட் போட்டபடி, ஓபிஎஸ்ஸுடன் பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நகர்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், சென்னை, அடையாறில் வசித்து வரும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். பன்னீர்செல்வத்துடன் இணைந்து முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவியை சந்தித்தார்.
பின்னர், அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது, பன்னீர்செல்வத்திடம் சபரீசனுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஓபிஎஸ் விளக்கம்:
அப்போது, பதில் அளித்து பேசிய ஓ.பி.எஸ், சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றபோது இருவரும் தற்செயலாக சந்தித்துக் கொண்டோம். சந்திப்பில், எந்தவித அரசியலும் இல்லை" என தெளிவுப்படுத்தியுள்ளார்.
சசிகலா குறித்து பேசிய ஓ.பி.எஸ், "கடந்த காலங்களை மறுந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். சிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் அவரையும் சந்திப்பேன்" என்றார்.
இதையடுத்து, எதிர்கால அரசியல் திட்டம் குறித்து பேசிய டிடிவி, "அதிமுகவை மீட்க ஓ. பன்னீர்செல்வமும் நானும் ஒன்றிணைந்துள்ளோம்.
சிபிஎம்(மார்க்சிஸ்ட்), சிபிஐ(இந்திய கம்யூனிஸ்ட்) போல் இரு கட்சிகளும் செயல்படும். நேரில் சந்திக்கவில்லையே தவிர ஓ. பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தொலைபேசியில் பேசினேன். ஓபிஎஸை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்ல முடியும். எங்களுக்கு ஈபிஎஸ் துரோகி. திமுக எதிரி" என்றார்.
தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சசிகலா, டிடிவியை எதிர்த்து ஓபிஎஸ் தரம்யுத்தம் நடத்தினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, சசிகலா, டிடிவி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி வெடிக்க, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினார். ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
இப்படி, தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ. பன்னீர்செல்வம், தற்போது டிடிவியுடன் கைக்கோர்த்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.