Family Man 2 | 'தி ஃபேமிலி மேன் 2' வெப் தொடர் சர்ச்சை - விளக்கமளித்த தொடரின் இயக்குநர்கள்
தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் குறித்து எழுந்த சர்ச்சைக்கு தற்போது அந்த தொடரின் இயக்குநர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியில் "தி ஃபேமிலி மேன் 2” என்ற தொடர் உருவாக்கப்பட்டு, அந்த தொடரின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி இந்த இணைய தொடர் அமேசான் தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இணைய தொடரில் சில காட்சிகள் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி, இந்த தொடருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்த தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சில தினங்களுக்கு முன்பு மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View this post on Instagram
அவர் எழுதிய அந்த கடிதத்தில், “தி பேமிலி மேன் 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கிறேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. தமிழர்களை பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளவர்களைப் போலவும் சித்தரித்து இருக்கிறார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை நீத்த ஈழப்போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக அந்த தொடரில் காட்சிகள் இருக்கின்றன.
இத்தகைய காட்சிகளை கொண்ட இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. எனவே, இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை மட்டுமே முதன்மையாக வைத்து தற்போது பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் பணியாற்றிய பல முன்னணி கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் எழுத்து மற்றும் இயக்கப்பணியில் ஈடுபட்ட பலர் தமிழர்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் தமிழ் மக்களின் உணர்வுகளை குறித்து நாங்கள் நன்கு அறிந்தவர்கள், தமிழ் மக்கள் மிகுந்த அன்பும் மரியாதையும் எங்களுக்கு உள்ளது. இந்த வெப் தொடரை உருவாக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளோம். ஆகவே மக்கள் தயவுகூர்ந்து தொடர் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டுகிறோம். நிச்சயம் நீங்கள் எங்கள் படைப்பை பாராட்டுவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது' என்று வெளியான இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டுள்ளது.