புகைப்பிடிப்பவர்களின் கவனத்திற்கு! ஆணுக்கு 17 நிமிடங்கள்; பெண்ணுக்கு 22 நிமிடங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஒவ்வொரு சிகரெட்டை அடிப்பதன் மூலம் ஒரு மனிதன் தனது வாழ்நாளை கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இழக்கிறான் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு சிகரெட்டை அடிப்பதன் மூலம் ஒரு மனிதன் தனது வாழ்நாளை கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இழக்கிறான் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தங்களது சராசரி வாழ்நாளில் ஆண்கள் 17 நிமிடங்களையும் பெண்கள் 22 நிமிடங்களையும் ஒரு சிகரெட்டை புகைப்பதன் மூலம் தனது வாழ்நாளை இழக்கின்றனர் என ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு சிகரெட்டும் புகைப்பிடிப்பவரின் ஆயுளை 11 நிமிடங்கள் குறைக்கிறது என்ற முந்தைய புள்ளிவிவரங்களை விட புதிய ஆய்வுகளின் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளன.
2025 ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்புத் துறையால் நியமிக்கப்பட்ட ஆய்வை நடத்திய லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், புகைபிடிப்பவர்கள் ஆரோக்கியமற்ற பழக்கத்தை விட்டுவிட்டு புத்தாண்டை நல்ல படியாக தொடங்க வேண்டும் என்று கூறினர்.
“சிகரெட் புகைப்பதால் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புகைபிடிப்பவர்கள் பொதுவாக மொத்த ஆயுட்காலத்தைப் போலவே ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். இதனால் புகைபிடித்தல் வாழ்நாளை குறைப்பதை காட்டிலும் ஆரோக்கியத்தை இழந்து நாள்பட்ட நோய்க்கும் வழிவகுக்கிறது.
சராசரியாக, ஒரு சிகரெட் ஒரு நபரின் வாழ்க்கையில் சுமார் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதாவது 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் ஒரு நபரின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் குறைகிறது” என்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
இதுகுறித்து மருத்துவர் சாரா ஜாக்சன் கூறுகையில், “புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாக மக்களுக்குத் தெரியும், ஆனால் அது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சராசரியாக, புகைபிடிப்பதை நிறுத்தாதவர்கள் சுமார் ஒரு தசாப்த வாழ்க்கையை இழக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்