Satyendra Jain: உயிருக்கு போராடும் முன்னாள் அமைச்சர்... ஐ.சி.யு.வில் தீவிர சிகிச்சை..! திகார் சிறையில் நடந்தது என்ன?
டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனை ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்திர ஜெயின், குளியலறையில் இரண்டாவது முறையாக வழுக்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திகார் சிறையில் பரபரப்பு:
கடந்த ஓராண்டு காலமாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் ஜெயின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்களன்று, சிறையின் குளியலறையில் அவர் தவறி விழுந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு ஏற்பட்ட முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இடுப்பில் பெல்ட் கட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 35 கிலோ எடையை சத்யேந்திர ஜெயின் இழந்ததாகக் கூறப்படுகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருவதாகவும், தூங்கும்போது BiPAP இயந்திரம் தேவைப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
அதற்கு முன், சனிக்கிழமையன்று தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு CT ஸ்கேன் மற்றும் MRI உட்பட பல சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும் ஆனால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
ஆம் ஆத்மி திடுக் குற்றச்சாட்டு:
இச்சம்பவம் குறித்து சிகார் சிறை அதிகாரிகள் கூறுகையில், "காலை 6 மணியளவில், விசாரணைக் கைதியான சத்யேந்தர் ஜெயின் CJ-7 மருத்துவமனையின் MI அறையின் குளியலறையில் தவறி விழுந்தார். அங்கு அவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். முதுகு, இடது கால் மற்றும் தோள்பட்டையில் வலி இருப்பதாக அவர் புகார் தெரிவித்ததால், DDU மருத்துவமனையில் அவுரை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது" என தெரிவித்தனர்.
சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. சத்யேந்தர் ஜெயினை கொல்ல பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
உடல் எடை குறைப்பு:
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, "கைது செய்யப்படுவதற்கு முன்பு ஜெயின் அதிக எடையுடன் இருந்தார். அவர் உடல் எடையை குறைத்தது நல்லதுதான்" என கூறியுள்ளது. பார்க்க பலவீனமாக காணப்படும் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படதத்தை டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவரின் உடல்நிலைக்கு பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.