(Source: ECI/ABP News/ABP Majha)
நேரடியாக தேர்தல் களத்தில் போட்டியிடும் ஜடேஜாவின் மனைவியும், சகோதரியும்? சூடு பிடிக்கும் தேர்தல் களம்
குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், அவரது சகோதரியும் நேருக்குநேர் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், அவரது சகோதரியும் நேருக்குநேர் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 3ம் தேதி அறிவித்தது. முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் அனைத்தும் மும்முரமாகியிருக்கின்றன. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பல ஸ்டார் தொகுதிகள் இருக்கும் நிலையில், தற்போது ஜாம் நகர் தொகுதி பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. காரணம் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், அவரது சகோதரியும் தான். ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவும், அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜாவும் களமிறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா. ராஜ்கோட்டில் வசிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான அவர் தற்போது வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட ஜாம்நகர் தொகுதியை எதிர்பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா அதே ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அவர் தற்போது மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவராக உள்ளார். ஹோட்டல் வைத்து நடத்தும் அவர் தனது தீவிர கட்சிப்பணிகள் மற்றும் செயல்களுக்காக பொதுமக்களிடம் செல்வாக்குப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. தற்போது ஜாம் நகர் எம் எல் ஏவாக தர்மேந்திர சிங் இருந்துவரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த வாய்ப்பு ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவிற்கு வழங்கப்படும். தற்போது ராஜ்கோட்டில் இருக்கும் ரிபபா ஜாம்நகரில் களமிறங்குவார்.
பாஜகவின் நகர்வுகளை காங்கிரஸ் கவனித்துவருகிறது. ஒருவேளை ஜாம்நகரில் ரிவபா களமிறங்கும் நிலையில் அவருக்கு எதிராக நைனாவை களமிறக்க ஆயத்தப்படுத்தி வருகிறது. இருவருக்குமே செல்வாக்கு இருக்கும் நிலையில், தேர்தலில் இருவரும் களமிறங்கினால் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.