தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? காங்கிரஸ் குற்றச்சாட்டு!
ED மற்றும் வருமான வரித்துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி இருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது என காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரம் தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய முக்கிய தரவுகளை தங்களின் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், யார் எல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், எந்த அரசியல் கட்சிகள் எல்லாம் நன்கொடை பெற்றுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பகீர் கிளப்பும் தேர்தல் பத்திர விவகாரம்:
அதன்படி, 22 நிறுவனங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருந்த லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் சென்ற பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 6000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. பாஜகவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
"பாஜகவின் கணக்குகளை முடக்க வேண்டும்"
இதுகுறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதை செய்ய வருமான வரித்துறைக்கு பாஜகதான் அறிவுறுத்தினர். கிட்டதட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
எப்படி தேர்தலுக்கு செல்வது? எங்கள் கணக்குகள் முடப்பட்டுள்ளன. ஆனால், அவர்களின் கணக்குகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சமதர்மம் எங்கு உள்ளது? இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உண்மை வெளிவராத பட்சத்தில் பாஜகவின் கணக்குகளையும் முடக்க வேண்டும். பாஜகவுக்கு ரூ.6000 கோடி நன்கொடை கிடைத்துள்ளது” என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் பத்திரம் தொடர்பான எஸ்பிஐ வங்கியின் தரவுகள் பாஜகவுக்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமான நன்கொடை பெற்றதாக காட்டுகிறது.
PM Modi says “ना खाऊँगा ना खाने दूँगा”, but it seems that he only meant —“सिर्फ़ भाजपा को खिलाऊँगा”
— Mallikarjun Kharge (@kharge) March 15, 2024
The data released by State Bank of India, shows that out of the total Electoral Bonds money collected, BJP got nearly 50% donation. While the principal opposition party, Indian…
பல சந்தேகத்திற்குரிய நன்கொடையாளர்கள் உள்ளனர். மேலும், கடந்த காலத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்குமாறு பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. உண்மை வெளிவரும் வகையில் விசாரணை நடத்தி, அதுவரை அவர்களின் கணக்கு முடக்கப்பட வேண்டும்" என்றார்.