ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்தியா கூட்டணி அரசு வெற்றி: 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 27 சட்டப்பேரவை உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் உள்ளனர்.
பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் மொத்தம் பலம் 76ஆக குறைந்தது.
இதன் காரணமாக, பெரும்பான்மைக்கு 38 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. ஜார்க்கண்ட் சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ஹேமந்த் சோரன் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரக்கும் அரசியல் நிலவரம்: ஜார்க்கண்டில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் 5 மாதங்களுக்கு முன்பு தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார்.
நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக ஹேமந்த் சோரன் மீது பாஜக புகார் அளித்தது. நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இப்படிப்பட்ட சூழலில்தான், முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகி, சம்பாய் சோரன் அந்த பதவிக்கு வந்தார். கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி, ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.
இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 30 தொகுதிகளையும் காங்கிரஸ், 16 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றியது.