chhattisgarh coal theft video: அடுத்தடுத்து ட்விஸ்ட்!! நிலக்கரி திருட்டு வீடியோ சர்ச்சை.. போலி என புகார்.!
காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் சத்தீஷ்கர் மாநில செயலாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓம் பிரகாஷ் செளத்ரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் சத்தீஷ்கர் மாநில செயலாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓம் பிரகாஷ் செளத்ரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தின் பாஜக மாநில செயலாளராக உள்ள ஓம் பிரகாஷ் செளத்ரி கடந்த மே மாதம் 17 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில், “ சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கேவ்ரா நிலக்கரி (Gevera mine) சுரங்கத்தில் நிலக்கரி திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலக்கரி திருட்டு குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இது மாஃபியா ராஜின் வெளிப்படையான செயல். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நிலக்கரி திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அடுத்த நாளே கோர்பா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட பல மூத்த அதிகாரிகள் கெவ்ரா மற்றும் டிப்கே நிலக்கரி சுரங்கங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது நிலக்கரி சுரங்கத்தின் நுழைவு மற்றும் வெளியே செல்லும் வழியில் பாதுகாப்பு குறைப்பாடுகள் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பான விசாரணை ஐஜியின் உத்தரவின் பேரில் நடந்து வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுசுதன் தாஸ் என்பவர் செளத்ரி பகிர்ந்த வீடியோ போலியானது என்று கூறி புகார் அளித்ததின் பேரில் சட்டப்பிரிவு 505 இன் கீழ் போலீசார் அவர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கோர்பா எஸ்.பி கூறும் போது, “ செளத்ரி பகிர்ந்த வீடியோ போலியானது என்று புகார் வந்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வாசிகளிடம் இருந்து வாக்கு மூலங்களை வாங்கி இருக்கிறோம். விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து செளத்ரி கூறும் போது, “ நான் வீடியோ வெளியிட்ட உடன் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ரானு சாஹூ அங்கு நிலக்கரி திருட்டு நடப்பதாகவும், அதிகாரிகளுக்கு அதை தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் கூறினார். திருட்டை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துதே எனது முயற்சி. சத்தீஷ்கர் அரசின் நோக்கம் திருட்டைக் கட்டுப்படுத்துவதே தவிர என் மீது எப்ஐஆர் பதிவு செய்வதல்ல. முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக நான் சிறைவாசத்தை சந்திக்க தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.