Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Air India Plane Crash Reason: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறும் நிலையில், விபத்துக்கான காரணம் பறவைகளாக இருக்கலாம் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தில் நடந்த கோர விமான விபத்தில் இதுவரை 170 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த விபத்து நடந்ததற்கு பறவைகள் காரணமாக இருந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கூறியது என்ன.?
அகமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகலில் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த போயிங் 787 ரக விமானத்தில், 242 பேர் வரை பயணம் செய்த நிலையில், தற்போது வரை பலி எண்ணிக்கை 170 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். இவர், லண்டனில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்னர், விமானத்தின் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே‘ சமிக்ஞை விடுத்துள்ளார். விமானத்தில் உச்சகட்ட அவசர நிலை ஏற்படும்போது விடுக்கப்படுவதுதான் மேடே சமிக்ஞை. இதைத் தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், உடனடியாக விமானிகளை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவர்களது அழைப்பை ஏற்கக் கூட விமானிகள் இல்லை. ஆம், அதற்குள் விமானம் விழுந்து, வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த நிலையில், விமானத்தின் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கிவிட்டது. விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் ஒருபுறம், போயிங் நிறுவன நிபுணர்கள் மற்றொருபுறம் என விபத்துக்கான காரணங்களை கண்டறிய நிபுணர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனிடையே, விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியும் கிடைத்துள்ளதால், அதை ஆராய்ந்த பிறகு, விபத்துக்கான முக்கிய காரணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், விமானத்தின் விபத்திற்கு, பறவைகள் மோதியதே காரணமாக இருந்திருக்கலாம் என, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானத்தின் 2 எஞ்சின்களிலும் விமானம் மோதி இருக்கலாம் என்றும், அதனால் மேலே எழும்புவதற்கான கூடுதல் சக்தியை எஞ்சினால் வழங்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சேதம் ஏற்பட காரணம் என்ன.?
அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல பயன்படுத்தப்பட்ட விமானமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம். இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுகிறது. கடந்த 2014 ஜனவரி மாதத்தில், இந்த விமானம் ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரக விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.
நவீன அம்சங்களை கொண்டுள்ள இந்த விமானம், 11 ஆண்டுகள் 5 மாதங்கள் சேவை புரிந்துள்ளது. சாதாரணமாக 25-லிருந்து 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய இந்த விமானம், 11 ஆண்டுகளில் விபத்திற்குள்ளானது துரதிஷ்டவசம்தான். மேலும், இந்த விமானத்தை இயக்கிய விமானிகளும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தவறு செய்திருக்க வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படும் நிலையில், இப்படி ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
எனினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், விரைவில் விபத்திற்கான சரியான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















