ரூ.4.71 லட்சம், 31 கிராம் தங்கம்: காணியம்மன் கோவில் உண்டியலில் விழுந்த காணிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.4.71 லட்சம் பணம், 31 கிராம் தங்கம், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.4.71 லட்சம் பணம், 31 கிராம் தங்கம், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலில், இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மாரியம்ப்ட்டி, மூக்காரெட்டிப்பட்டி, எச்.புதுப்பட்டி, நடூர், சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழாவை வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 10 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திரீவிழாவில், தினமும் சிறப்பு அபிஷேகம், உபயம், அன்னதானம் நடத்தப்படுகிறது. இதில் தினமும் ஒரு சமூகத்தினர் உபயம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த திருவிழா முடிந்தவுடன் ஆண்டுதோறும் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவணி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்தது. இதனை அடுத்து நேற்று காலை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் காணியம்மன் கோவில் செயல் அலுவலர் கீர்த்தனா, உதவி ஆணையர் முன்னிலையில், இந்து அறநிலைத்துறை ஊழியர்கள், உள்ளூரில் உள்ள கோவில் அறங்காவல் குழுவினர், பெரியவர்கள், பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் கருவறை மற்றும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு உண்டியலில் பொதுமக்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டது. சில்லறை காசுகள் தனியாகவும் ரூபாய் நோட்டுக்களை தனித் தனியாக பிரித்து அடுக்கி வைத்தனர்.
இதில் 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக கட்டப்பட்டது. மேலும் சில்லரைக் காசுகள் ஐந்து, இரண்டு, ஒரு ரூபாய் நாணயங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் கட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஓராண்டில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நான்கு உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.71 லட்சம் பணம் இருந்தது. மேலும் கடந்த ஓராண்டில் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்த குத்துவிளக்கு, தங்கம் உள்ளிட்டவைகள் 31 கிராம் இருந்தது.
ஆனால் வெள்ளிப் பொருட்கள் எதுவும் உண்டியலில் காணிக்கையாக வரவில்லை. தொடர்ந்து உண்டியலில் இருந்த பணம் முழுவதும், பொதுமக்கள் முன்னிலையில், வீடியோ பதிவுடன் எண்ணப்பட்டு இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து, பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயில் கருவறை மற்றும் வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் இந்து அறநிலைய துறை அதிகாரிகள், இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.