தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்..
கோவை குற்றாலம் திறப்பு, கருப்பு பூஞ்சை பாதிப்பு, திமுக ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட முக்கிய பத்து செய்திகள் இதோ...
கோவையில் நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 94,723 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று 706 தடுப்பூசி மையங்களில் பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 257 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்தன. ஈரோடு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு சற்று குறைந்தது. அதேசமயம் கோவையில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 6 ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் நீர் வரத்து அதிகரிப்பினால் கடந்த 9-ஆம் தேதி முதல் 11 நாட்களாக மூடப்பட்டு இருந்தது. நீர் வீழ்ச்சிக்கு செல்ல விரும்புபவர்கள் ஆன்லைனில் முன் பதிவு செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கவி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்து இருந்த நிலையில், திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி வனத் துறையினர் சுற்றுலா பயணிகளை வெளியேற்றியதால், குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த பின்னர், இதனை அவர் தெரிவித்தார்.
மத்திய அரசை கண்டித்து, திமுக கூட்டணி கட்சியினர் மேற்கு மாவட்டங்களிலும் இன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். வேளாண் திருத்தச் சட்டங்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சுகாதார ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைவதால், ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 83 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தர்மபுரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.