கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள்; பொதுமக்கள் ஆச்சரியம்
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
கோவையின் பெருமைகளை பறை சாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோவை விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் பழங்கால கார்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், அக்கார்களின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பழங்கால கார்களில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 100 பழைய மாடல் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர் லேம்பர்டா,ஜெடாக் வகை உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக கார்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன்னும், ஆர்வமுடத்திடனும் பார்வையிட்டனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக கோவை லூலு மால் வளாகத்தில் சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பழங்கால கார் கண்காட்சியை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.