Dinesh Karthik: அன்று வீரன்.. இன்று ஆசான்! கம்பீரை போல சாதிப்பாரா தினேஷ் கார்த்திக்! ஆர்சிபி வசமாகுமா மகுடம்?
RCB Coach Dinesh Karthik: ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த முறை அந்த அணியின் வழிகாட்டியாகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஐபிஎல் திருவிழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கோப்பையை கைப்பற்ற 10 அணிகள் களத்தில் குதித்துள்ளன. இதில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள மும்பை, சென்னை, பெங்களூர் அணிகள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஆர்சிபியின் தூணாக தினேஷ் கார்த்திக்:
தலா 5 கோப்பைகளை வைத்துள்ள சென்னை, மும்பை அணிகளுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் அணி. அதற்கு முக்கிய காரணம் விராட் கோலி. 18 சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும், கடந்த சில சீசன்களாக அவர்களது செயல்பாடு பாராட்டும் விதமாகவே உள்ளது.
புதிய கேப்டன், புதிய வீரர்கள் என புது தெம்புடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ளது ஆர்சிபி அணி. அந்த அணிக்கு மற்றொரு தூணாக மாறியிருப்பவர் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் தந்தது ஆர்சிபி என்றால் அது மிகையாகாது.
ஆர்சிபி-யின் ஃபினிஷர்:
விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காகவும், ஐபிஎல்- தொடரில் பல அணிகளுக்கும் ஆடிய தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்த நிலையில், 2022ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தாண்டு அவரது செயல்பாடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் காரணமாக அவருக்கு 2022ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைத்தது.
தினேஷ் கார்த்திக்கின் அபாரமான ஆட்டத்தால் ஆர்சிபி அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியதுடன், ஆர்சிபி அணியின் ஃபினிஷராக உருவெடுத்தார். கடந்த சீசனில் ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 288 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் அணிக்காக தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 83 ரன்கள் எடுத்தார்.
வழிகாட்டி:
அந்த போட்டியில் ஆர்சிபி அணி தோற்றாலும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், கடந்த சீசனுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு வீரராக கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் கோப்பையை வென்றாக வேண்டும் என்று இந்த முறையும் ஆர்சிபியில் களமிறங்கியுள்ளார்.
ஆனால், இந்த முறை ஆர்சிபி-யின் வீரராக இல்லாமல் வழிகாட்டியாக களமிறங்கியுள்ளார். வழிகாட்டியாக மட்டுமில்லாமல் பேட்டிங் பயிற்சியாளராகவும் இந்த முறை ஆர்சிபி அணிக்காக அவர் களமிறங்கியுள்ளார். தோனிக்கு முன்னதாகவே இந்திய அணிக்காக அறிமுகமான தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 26 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம், 7 அரைசதத்துடன் 1025 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதத்துடன் 1752 ரன்களும், 60 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 686 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 257 போட்டிகளில் 234 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 22 அரைசதங்களுடன் 4 ஆயிரத்த 842 ரன்கள் எடுத்துள்ளார்.
கம்பீரைப் போல வெல்வாரா?
தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தை கொண்டு இந்த முறை ஆர்சிபி அணிக்கு வழிகாட்டியாக களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக் கோப்பையை வென்று தர வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறார். கடந்த முறை கொல்கத்தா அணிக்கு வழிகாட்டியாக களமிறங்கிய கவுதம் கம்பீர் அந்த அணிக்கு மகுடம் சூடி தந்தார். அதேபோல, தினேஷ் கார்த்திக்கும் கம்பீர் போல ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

