Udhayanidhi Stalin : இது என்னோட ஆட்டம் - அரசு அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் உதயநிதி!
Udhayanidhi stalin: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு அரசில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.
மதுரை மக்கள் செங்கல்லை எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு அரசில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.
இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS). இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட்போட்டிகள் 2023 - பிப்ரவரி 12 முதல் 25 வரையிலும், மார்ச் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் போரூர், இராமச்சந்திரா மருத்துவ கல்லூரியிலும், பிப்ரவரி 19ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியிலும், கொளப்பாக்கம் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியிலும் நடைபெறுகிறது.
இந்தாண்டுக்கான போட்டியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.01.2023) தொடங்கி வைத்தார். அங்குள்ள வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பேட்டிங் செய்தார்.
இன்று முதல் ஒவ்வோரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இறுதிபோட்டி மார்ச் 12- ஆம் தேதி போரூரில் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகளும். நேரு உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர், இராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, அறிவியல் விளையாட்டு மையத்தில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி. பளுதூக்குதல், துப்பாக்கி கடுநல், நீச்சல், சைக்கிளிங் பயிற்சி மையங்கள் மற்றும் சிந்தடிக் ஹாக்கி மைதானம் ஆகிய விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, அதிகாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளதாவும், வரும் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் நல்ல அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார்.
எய்ம்ஸ் குறித்து பேசிய அவர், மதுரை மக்கள் செங்கல்லை எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசுகையில், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஐ.பி.எஸ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 102 ரன்கள் எடுத்த நிலையில் ஐ.ஏ.எஸ் அணி 103/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 2023 – பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சார்ந்த வீராங்கனைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு கால்பந்து விளையாட்டு சங்க துணைத் தலைவர் திரு. சுரேஷ் மனோகரன், இந்திய பெண்கள் கால் பந்து அணியின் உதவி பயிற்சியாளர் கல்பனா தாஸ், காஞ்சிபுரம் மாவட்ட கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் ராபர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.