"பாட்டு பாடு.. டான்ஸ் ஆடு" மெடிக்கல் காலேஜில் சீனியர்கள் அட்ராசிட்டி.. மீண்டும் தலைதூக்கும் ராகிங்!
கர்நாடகாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவரை சீனியர் மாணவர்கள் தாக்கியுள்ளனர். இந்த ராகிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவருக்கு இந்த ராகிங் கொடுமை நடந்துள்ளது.
தொடரும் ராகிங் கொடுமை:
கடந்த சில நாள்களாக, ராகிங் கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது. கேரளாவில் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து, காரியவட்டம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவருக்கு ராகிங் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் உள்ள அல்-அமீன் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர், சீனியர் மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரின் பெயர் ஹமீம். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்.
இவர், விஜயபூராவில் உள்ள அல்-அமீன் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 2019ஆவது பேட்ச் சீனியர் மாணவர்களால் தான் கொடூரமான ராகிங் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக ஹமீம் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் ஷாக் சம்பவம்:
நேற்று மாலை 4 மணியளவில் கல்லூரி வளாகத்தில் 2019 மற்றும் 2022 பேட்ச் மாணவர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. அதை, ஹமீம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு சீனியர் மாணவர் அவரை பவுண்டரி லைனுக்கு வெளியே நிற்கும்படி சொல்லி இருக்கிறார். ஹமீம் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தூரத்திலிருந்து போட்டியை பார்க்க தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, மேலும் சில சீனியர் மாணவர்கள் சேர்ந்து, ஹமீமிடம் தகராறு செய்துள்ளனர். அங்கிருந்து வெளியேறுமாறு ஹமீமை மிரட்டியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துள்ளார். பின்னர், பாடல்களை பாடும்படியும், நடனமாடவும் அவர் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதோடு நிற்காமல், அவரை காரில் கட்டாயப்படுத்தி ஏற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தைப் பதிவு செய்ய அவர் தனது தொலைபேசியை எடுத்தபோது, சீனியர் மாணவர்கள் இன்னும் ஆக்ரோஷமாக மாறியுள்ளனர்.
இதையடுத்து, அன்று இரவு, 6 முதல் 8 பேர் கொண்ட சீனியர் மாணவர்கள் குழு ஹமீமின் விடுதி அறைக்குள் நுழைந்தது. அவர்கள் அவரைத் தாக்கினர். வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவு செய்ய கட்டாயப்படுத்தினர். மீதமுள்ள கல்லூரி காலம் முழுவதும் கிரிக்கெட்டை விளையாட விடாமல் செய்துவிடுவோம் என சீனியர் மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

