Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிக்கியிருந்தால் தொடர்புகொள்ள எண் அறிவிப்பு
Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி ஆழ்ந்த இரங்கல்
ஒடிஷாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தினால் சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும். 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். படுகாயம் அடைந்து சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த ம்அவசரகால மையம் 24 மணிநேரமு இயங்கும்.
கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1070, 1077, 112,
தொலைபே எண்கள்: 0413-2251003, 2255996.
ஒடிசா ரயில் விபத்து:
ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நடைபெற்ற 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்தது என்பதால், இதில் தமிழர்கள் ஏராளமானோர் பயணித்து இருக்கலா என எதிர்பார்கப்படுகிறது.
தமிழக அரசு தீவிரம்:
இதையடுத்து விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டது. இதுதொடர்பாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதோடு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோருடன், தமிழக அதிகாரிகளும் ஒடிசா விரைந்துள்ளனர். இதனிடையே, தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு சிறப்பு ரயில்:
விபத்தில் காயமின்றி தப்பிய 200-க்கும் அதிகமான பயணிகள், ஒடிசாவின் பாகாநாகா பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹவுரா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, காயமின்றி தப்பியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சுமார் 150-க்கும் மேலான தமிழர்கள் நாளை காலை புவனேஷ்வரில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். சுமார் 9 மணியளவில் இந்த ரயில் அங்கிருந்து புறப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்:
விபத்தில் படுகாயமடைந்த 50-க்கும் அதிகமான தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டு வர நடவடிக்கை முடிக்கிவிடபட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.