காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
மின்வாரிய அதிகாரிகள் திருடப்பட்ட மின் மாற்றியிலிருந்த இணைப்புகளை, மற்றொரு மின் மாற்றியில் கூடுதலாக இணைத்து இணைப்பை வழங்கியதால், போதிய மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்காராயன்குடிகாட்டில் காப்பர் காயில் திருடப்பட்ட மின்மாற்றி இணைப்புகளை வேறு மின் மாற்றியிலிருந்து கூடுதலாக வழங்கியதால் போதிய அளவு மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் உள்ள மின் மாற்றியிலிருந்து கடந்த 15 தினங்களுக்கு முன் காப்பர் காயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் திருடப்பட்ட மின் மாற்றியிலிருந்த இணைப்புகளை, மற்றொரு மின் மாற்றியில் கூடுதலாக இணைத்து இணைப்பை வழங்கியதால், போதிய மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து. கடந்த 15 தினங்களுக்கு முன் மர்மநபர்கள் காப்பர் காயிலை திருடிச் சென்றனர். துகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வல்லம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததால், மின்மாற்றிக்கு புதிய காப்பர் காயிலை அதிகாரிகள் பெற்று, திருட்டு போன இடத்தில் மீண்டும் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்யும் வேங்கராயன்குடிக்காடு, அதினாம்பட்டு விவசாயிகள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாட்களாக போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக வேறொரு மின் மாற்றியிலிருந்து கூடுதலாக இணைப்பை வழங்கினர். ஆனாலும், அந்த மின் மாற்றியில் ஏற்கெனவே பத்து விவசாய மின் இணைப்புகள் உள்ள நிலையில், கூடுதலாக பத்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டதால், குறைந்தழுத்த மின் விநியோகமும், பற்றாக்குறையான மின் விநியோகமும் கிடைக்கிறது. முழுமையாக மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மின் மோட்டார்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள மின்மாற்றியிலிருந்து 15 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் காப்பர் காயிலை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தோம். உடன் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் வல்லம் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வகமாக புகார் அளித்தனர். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்தால் தான், அதன் அடிப்படையில் புதிய காப்பர் காயிலை பொருத்த முடியும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், திருட்டு போன மின் மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்த விவசாயிகளின் சோளம், கடலை, நெல் போன்ற பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதையடுத்து மற்றொரு மின்மாற்றியிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதல் மின் இணைப்பால் அங்கும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலத்தில் மின்மாற்றியில் உள்ள காப்பர், விவசாயிகளின் மின் மோட்டாரில் உள்ள மின் ஒயர்கள் போன்றவற்றை மர்மநபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இனி இதுபோன்ற திருட்டுக்கள் நடக்காதவாறு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மர்மநபர்கள் மின்காயில்கள், மின்மோட்டார் ஒயர்கள் என்று தொடர்ந்து திருடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















