Chennai Ford Plant: உற்பத்தியை துவங்கும் சென்னை ஃபோர்டு.. இதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
Ford Chennai Plant Latest News Tamil: ஃபோர்டு தொழிற்சாலை சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கும் என அறிவித்துள்ளது.

Chennai Ford Reentry: உலக அளவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான, ஃபோர்டு இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி செய்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வந்த ஃபோர்டு நிறுவனம், படிப்படியாக தனது கார் உற்பத்தியை குறைத்தது.
இந்தியாவில் இருந்து வெளியேறிய ஃபோர்டு நிறுவனம்
இந்தியாவில் கார் உற்பத்தி செய்து வந்த ஃபோர்டு நிறுவனம் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடியது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு, வாங்கியது.
சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின், அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
தொடர் பேச்சுவார்த்தை
சென்னை மறைமலைநகர் ஃபோர்டு ஆலையை இயக்குவது குறித்து, ஃபோர்டு நிறுவனத்துடன் அதிகாரிகள் தற்போது பேச்சு நடத்தி வருகின்றனர்.வரும் மார்ச்சுக்குள் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தால், அதில் பணி செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்குமா ? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் தொழிற்சாலை எப்படி செயல்பட உள்ளது என்ன கார்கள் தயாரிக்கப்பட உள்ளது, என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருப்பது என்ன ?
உலகச் சந்தைக்கான உற்பத்திக்கு சென்னை ஆலையை பயன்படுத்துவதில் சென்னை போர்ட் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போது உற்பத்தி துவங்கும்; எந்த வகை யான கார்கள் உற்பத்தி செய்யப்படும் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 900 கோடியிலிருந்து 2700 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

