அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
சென்னை சர்வதேச விமான முனையத்தில் விமான நிலைய சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அயன் பட பாணியில் மறைத்து எடுத்து விரப்பட்ட 1.02 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அயன் பட பாணியில் கடத்தல்:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
சென்னை அண்ணா சர்வதேச விமான முனையத்தில் விமான நிலைய சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் (அக்டோபர் 8ஆம் தேதி) நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கச் சங்கிலிகள், 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 4 ஐஃபோன்கள் அடங்கும். மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 4 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் இடைமறித்து சோதனை செய்தனர்.
தட்டித்தூக்கிய அதிகாரிகள்:
இந்த சோதனையின் போது 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான 2 தங்கச் சங்கிலிகளை அவர்களது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதே போன்று 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 256 ஜிபி திறனுள்ள ஐஃபோன் 16 ப்ரோ 4-ம் அவர்களது உடமைகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்தம் மதிப்பு ரூ.1.02 கோடியாகும். இது தொடர்பாக ஒரு பயணி கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் அருகே பக்ரோடா தொழில்பேட்டையில் போதைப்பொருள் கும்பலை குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.
ALSO READ | Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

