Krishna Jayanthi 2025 Date: கிருஷ்ண ஜெயந்தி வரும் சனிக்கிழமையா? ஞாயிற்றுக்கிழமையா? பக்தர்களே இதுதான் சரியான நாள்!
Krishna Jayanthi 2025 Date: கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி வரும் ஆகஸ்ட் 16ம் தேதியா? அல்லது ஆகஸ்ட் 17ம் தேதியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Krishna Jayanthi 2025 Date in Tamil: காக்கும் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் விஷ்ணு. அவரது அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர் அவதாரம். அந்த கிருஷ்ண பெருமாள் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி:
மதுரா நகரில் சிறையில் இருந்த வசுதேவர் - தேவகி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கிருஷ்ணர். கம்சனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை காப்பதற்காக கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. வசுதேவர் - தேவகிக்கு அவர் பிறந்தாலும் யசோதையால் அவர் வளர்த்தெடுக்கப்பட்டார்.

புராணங்களில் கிருஷ்ண பெருமான் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் கிருஷ்ணர் அவதரித்தார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தியாக அதாவது கோகுலாஷ்டமியாக கொண்டாடி வருகிறோம்.
ஆகஸ்ட் 16ம் தேதியா? 17ம் தேதியா?
நடப்பாண்டில் தேய்பிறை அஷ்டமி ஒருநாளிலும், ரோகிணி நட்சத்திரம் ஒரு நாளிலும் வருவதால் கிருஷ்ண ஜெயந்தி எப்போது? என்ற குழப்பம் பக்தர்களுக்கு உண்டாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 16ம் தேதி தேய்பிறை அஷ்டமி திதியும், அதற்கு அடுத்த நாளான 17ம் தேதி ரோகிணி நட்சத்திரமும் வருகிறது.
ஆடி மாத கடைசி நாளான ஆடி 31ம் நாள் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. அதே நாளில்தான் தேய்பிறை அஷ்டமி திதி வருகிறது. ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கும் இந்த அஷ்டமி திதி ஆகஸ்ட் 16ம் தேதி இரவு 11.13 மணி வரை வருகிறது.
இதற்கு அடுத்த நாள் ஆவணி பிறக்கிறது. அந்த நாளில்தான் ரோகிணி நட்சத்திரம் பிறக்கிறது. ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6.49 மணிக்கு ரோகிணி நட்சத்திரம் பிறக்கிறது. இந்த ரோகிணி நட்சத்திரம் அடுத்த நாளான ஆகஸ்ட் 18ம் தேதி அதிகாலை 4.28 மணி வரை நீடிக்கிறது.
எந்த நாளில் கொண்டாடலாம்?
தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் அடுத்தடுத்த நாளில் வருவதுதான் பக்தர்களின் குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி பிறக்கும் ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக்கிருத்திகை ஆகும். அந்த நாள் ஆடி அமாவாசையும் ஆகும். கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.
இதனால், ஆகஸ்ட் 16ம் தேதி முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளை கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதி கொண்டாடலாம்.

கிருஷ்ணர் சிறையில் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடினாலும், அவர் மறுநாள் கோகுலத்திற்கு வந்த தினத்தை பக்தர்கள் கோகுலாஷ்டமியாக கொண்டாடி வருகின்றனர். அப்படி பார்க்கும்போது, ஆகஸ்ட் 17ம் தேதி ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை கோகுலாஷ்டமியாகவும் கொண்டாடலாம். மேலும் அன்று ஆவணி 1ம் நாள் என்பது கூடுதல் சிறப்பாகும். மொத்தத்தில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம்.
கொண்டாட்டம்:
கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். குறிப்பாக, வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சமீபகாலமாக கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்தும், குழந்தைகளின் பாதங்களை வீடுகளில் நடந்து வருவது போல வரைந்து கிருஷ்ணரே வீட்டிற்கு வருவது போலவும் கொண்டாடுகின்றனர். மேலும், வீட்டில் கிருஷ்ணர் படத்திற்கு அல்லது சிலைக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் மேற்கொள்கின்றனர்.




















