Hyundai Tucson: ஹுண்டாய் டக்சன் - மான்ஸ்டர் உருவம், சைபார்க் அம்சங்கள் - ஃப்ளாக்ஷிப் மாடல்னா சும்மாவா
Hyundai Tucson 2026 SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாயின் ஃப்ளாக்ஷிப் கார் மாடலாக மேம்படுத்தப்பட்ட டக்சன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Hyundai Tucson 2026 SUV: ஹுண்டாயின் மேம்படுத்தப்பட்ட டக்சன் கார் மாடலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேம்படுத்தப்பட்ட ஹுண்டாய் டக்சன்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவன இன்ஜின் கார்களின், ஃபிளாக்ஷிப் மாடலான டக்சன் விரைவில் பல முக்கிய அப்க்ரேட்களை பெற உள்ளது. அடுத்த தலைமுறை மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த காரானது, வெளிநாடுகளில் சாலை பரிசோதனையை தொடங்கியுள்ளது. இதே கார் மாடல் தான் அப்படியே இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான், முதன்முறையாக இந்த காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தொடர்பான விரிவான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹுண்டாய் டக்சன் - வெளிப்புற அம்சங்கள்
சாலை பரிசோதையின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் புதிய டக்சனின் வெளிப்புற மாற்றங்களை விவரிக்கின்றன. N விசியன் கான்செப்ட் 74, நெக்சோ FCV மற்றும் சாண்டே ஃபே ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து புதிய வெளிப்புற அப்டேட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வெறும் ஃபேஸ்லிஃப்ட் ஆக மட்டுமின்றி புதிய தலைமுறை மாடலாகவே மாற்றப்பட்டுள்ளது. பாக்சியான கட்டமைப்பில் ரேக்ட் விண்ட்ஸ்க்ரீன் & பாக்ஸி எஸ்யுவி மாதிரியான டோர்களை பெற்றுள்ளது. அளவு அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ள இந்த காரில் முதல்முறையாக பாப்-அவுட் கைப்பிடிகளும் வழங்கப்பட்டுள்ளன. 20 இன்ச் வீல்களில் 5 ஸ்போக் பேட்டர்னை பெற்றுள்ளது. பாண்ட் ஃப்ளாட் ஆக உள்ளது. லைட் பாருடன் இணைக்கப்பட்ட க்ராஸ் வெர்டிகல் எல்இடி டிஆர்எல்களை பெற்றுள்ளது. முகப்பு விளக்குகள் சற்றே கீழே பொருத்தப்பட்டுள்ளன. ORVM-களுக்கு முன்பு இருந்ததை விட எதிர்கால் வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹுண்டாய் டக்சன் - உட்புற அம்சங்கள்
டக்சனின் உட்புறம் தொடர்பான தகவல்களை ஹுண்டாய் நிறுவனம் ரகசியமாகவே தொடர்கிறது. அதேநேரம், இந்த காரில் கடந்த ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளியோஸ் ஸ்க்ரீன் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி இந்த பெரிய ப்ளியோஸ் ஸ்க்ரீன் இடம்பெற்றால், கிளஸ்டரின் தேவையை குறைக்கும் அல்லது அதன் இடத்தை சுருக்கும். மேலும் ஒரு ஹெட்-அப் டிஸ்பிளேவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கூடுதலாக எலெக்ட்ரிகலி ஆப்ரேடட் பாஸ் மோட் இருக்கைகள், புதிய டோர் ட்ரிம்கள், ஹீடட் & வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் ஃப்ளோட்டிங் சென்ட்ரல் கன்சோல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியரிங் செலக்டரை ஸ்டியரிங் காலமிற்கு மாற்றி, சேமிப்பிற்காக கூடுதல் இடவசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜிங் பட்டன் பேட், இன்ஜின் ஸ்டார்ட் பட்டன் ஆகியவை செண்டர் கன்சோலில் இடம்பெற்றுள்ளன.
என்ன எதிர்பார்க்கலாம்?
ஹுண்டாய் பிராண்டின் பிரபலமான கார் மாடலாக டக்சன் நீண்ட காலமாக திகழ்கிறது. எதிர்கால வடிவமைப்பு மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கான முழுமையான அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்டு, சர்வதேச அளவில் ப்ரீமியம் எஸ்யுவி ஆக திகழ்கிறது. NX5 என்ற கோட்நேமை கொண்ட இந்த காரானது 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 2027 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஏற்கனவே இதில் ஃபிங்கர்ப்ரிண்ட் அதெண்டிகேஷன், லெவல் 2 ADAS என பல தொழில்நுட்ப அம்சங்களும் நிரம்பி வழிகின்றன. வடிவத்தில் மான்ஸ்டரை போன்றும், அம்சங்களில் சைபார்க்கை போன்றும் வலுவான கார் மாடலாக டக்சன் திகழ்கிறது.
ஹுண்டாய் டக்சன் - இன்ஜின் விவரங்கள், வெளியீடு
இன்ஜின் அடிப்படையில் டக்சனில் எந்த மாற்றமும் இன்றி, டீசல் இன்ஜின் இல்லாமல் தற்போதைய மாடலில் இருக்கும் அம்சங்கள் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. 51.5 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் அம்சமும் அப்படியே கொண்டு வரப்பட உள்ளது. இந்திய சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் இன்ஜின் அடிப்படையிலான ஃப்ளாக்ஷிப் கார் மாடலாக கருத்தில் கொண்டால், டக்சன் காரின் அடுத்த தலைமுறை மாடல் 2027ம் ஆண்டு சந்தைப்படுத்தப்படலாம். தற்போதைய டக்சன் மாடலின் ஆன் ரோட் விலை சென்னையில் 36.78 லட்சத்தில் தொடங்கி 45.22 லட்சம் வரை நீள்கிறது. எனவே, இதன் மேம்படுத்தப்பட்ட எடிஷனின் தொடக்க விலை சுமார் 40 லட்சத்தை எட்டக்கூடும்.





















