Vithaikkaaran Movie Review: ரசிகர்களிடம் வித்தை காட்டி வென்றாரா சதீஷ்? “வித்தைக்காரன்” திரைப்பட விமர்சனம்!
Vithaikkaaran Movie Review: இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வித்தைக்காரன் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
Venki
Sathish Anand Raj Japan Kumar MadhuSudhanan Rao Simran Gupta
காமெடி நடிகராக உலா வந்த நடிகர் சதீஷ் நாயகனாக நடித்து, இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் வித்தைக்காரன். இயக்குனர் வெங்கி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜான் பாண்டி தயாரித்துள்ளார். படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் ஈ சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பெயருக்கு ஏற்ப படத்தின் நாயகனாகிய சதீஷ் ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தும் மாயாஜாலக்காரராக வருகிறார்.
நட்சத்திரப் பட்டாளம்:
தலையில் அடிபட்டு ஒருநாள் ஞாபகத்தை இழந்த நபராக வரும் சதீஷூக்கும், தங்கம், வைரம் கடத்தும் மாரி கோல்ட், டாலர் அழகு மற்றும் கல்கண்டு கும்பலுக்கும் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் தர முயற்சிக்கும் திரைப்படமே வித்தைக்காரன்.
படத்தில் சதீஷ் மட்டுமின்றி ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணிய சிவா, மெட்ராஸ் பட புகழ் பவெல் நவகீதன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. மருத்துவமனையில் அடிபட்டு தனக்கு ஒருநாள் மட்டும் நடந்த நிகழ்வுகளை மறக்கும் நாயகனாக படத்தில் தனது கதையைத் தொடங்கும் சதீஷ், மாயாஜால நிகழ்ச்சி நடத்தியும் தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை ஏன் தொடர்பு கொள்கிறார்? அந்தக் கும்பலுக்கும் சதீஷ்க்கும் இடையே என்ன தொடர்பு? என திரைக்கதை நகர்கிறது.
முதல் பாதி எப்படி?
ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்தப் படத்திலும் அவரை டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக களமிறக்கியுள்ளார் இயக்குனர். ஆனால், டாலர் அழகு கதாபாத்திரம் முழுமையாக ரசிகர்களை ரசிக்க வைத்ததா என்றால் கேள்விக்குறி என்பதே பதில். அதேசமயம், சில இடங்களில் ஆனந்தராஜ் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
தமிழ் சினிமாவின் பல பாடல்களில் தனது வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டான்சர் ஜப்பான் குமார் இந்தப் படத்தில் ஒரு நடிகராகக் களமிறங்கியுள்ளார். ஆனந்தராஜூடன் அவர் படம் முழுக்க வந்தாலும், அவரது கவுன்டர்கள் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். முதல் பாதியை காமெடியாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கு, சில இடங்களில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியில் பெரும்பாலான கதைக்களம் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த கும்பலும் விமான நிலையத்திற்குள் சுற்றி வருகிறது.
இரண்டாம் பாதி:
இரண்டாம் பாதியில் படத்தின் மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் சதீஷ், அதே விமான நிலையத்தில் மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்யும் நபராக பணியாற்றுகிறவர் என்பதை நாயகி சிம்ரன் குப்தா கண்டுபிடிக்கிறார்.
சதீஷ் மருத்துவமனைக்கு சென்று தான் சம்பாதிக்கும் பணத்தை இளம்பெண் சிகிச்சைக்காகவும் வழங்குவதை சதீஷ் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார் நாயகி. உண்மையில் சதீஷ் மாயாஜாலம் நிகழ்ச்சி நடத்தும் மாயக்காரரா? விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நபரா? அந்தக் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? விமான நிலையத்தில் சிக்கிய 25 கோடி வைரம் யார் கையில் சிக்கியது? சதீஷ் பண உதவி செய்யும் அந்த இளம்பெண் யார்? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைக்கிறது.
படம் எப்படி?
படத்தில் சதீஷ், ஆனந்தராஜ், ஜப்பான் குமார், ஜான் விஜய், மாரிமுத்து, சாம்ஸ் என நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும் சிரிப்பலையை ஏற்படுத்தினார்களா என்றால் அது மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். ஆனந்தராஜ், ஜப்பான்- குமார், சதீஷ் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் ரசிக்கும் வகையில் அமைத்திருக்கலாம்.
அதேபோல முதல் பாதியில் மாயமான தங்கம் எங்கே சென்றது என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் வெங்கட் பரத்தின் சுனாமிகா பாடல் இதமாக இருந்தது. படத்திற்கு தேவையில்லாமல் பாடல்களை வைக்காததற்கு இயக்குநரை பாராட்டலாம். சில சறுக்கல்கள், கேள்விகளைத் தவிர்த்துவிட்டு ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள வித்தைக்காரன் படத்தைப் பாராட்டலாம்.