Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!
Kingdom of the Planet of the Apes Review: கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் அறியலாம்.
வெஸ் பால்
ஃபிரேயா ஆலன், லிடியா பெக்காம், ஓவன் டீக், கெவின் டுராண்ட்
திரையரங்குகள்
Kingdom of the Planet of the Apes Review: பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படத்தின் நான்காம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படவரிசையின் கதை சுருக்கம்:
அல்ஜைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை குணப்படுத்த, ஆராய்ச்சியாளர் ஒருவர் புதிய வைரஸை உருவாக்கி ஏப் எனப்படும் மனித குரங்குகள் மீது பரிசோதனை செய்வார். இதனால், ஏப்கள் மிகுந்த புத்திசாலிகளாக மாறும், அதேநேரம் அந்த வைரஸ் மனிதர்களுக்கு உயிரைக் பறிக்கும் ஆபத்தாக உருவெடுக்கிறது. இதனிடையே, புத்திசாலிகளாக மாறிய ஏப்களை, சீசர் எனும் ஏப் எப்படி வழிநடத்தியது, மனிதர் கூட்டத்தில் இருந்து விலகி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு எப்படி ஏப்களை அழைத்துச் சென்றது என்பதை மூன்று பாகங்களாக வெளியிட்டனர்.
அப்படத்தின் முடிவில், 80 சதவிகித மனித இனத்தை கொன்ற அந்த வைரஸ், ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களின் உயிரை பறிக்காமல், அவர்களது பேசும் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க செய்யும் விதமாக திரிபடைகிறது. இந்த படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்:
இந்நிலையில் தான் முதல் மூன்று படங்கள் நடைபெற்ற, காலகட்டத்திலிருந்து பல தலைமுறைகளுக்குப் பிறகு, கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதை என பார்த்தால், சீசர் பெயரை பின்பற்றி ஆட்சி செய்து வரும் பிராக்ஸிமஸ் எனும் ஏப், ஆபத்து காலங்களில் பதுங்குவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதர்கள் ரகசியமாக கட்டிய பதுங்குக் குழி ஒன்றை கண்டுபிடிக்கிறது.
அதை எப்படி திறப்பது என்ற தகவல் மே எனும் பெண் அறிந்திருக்கிறார். அவரை தேடிச் செல்லும் பிராக்ஸிமஸின் அடியாட்கள், நாயகன் நோவாவின் ஏப் பிரிவை தாக்கி பலரை கொன்று, சிலரை பிடித்து அடிமையாக்கி தங்களது இடத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதைதொடர்ந்து, நோவாவும், நாயகி மே-வும் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இறுதியில் நாயகன் தனது ஏப் பிரிவை விடுதலைப்படுத்தினாரா? மே அந்த பதுங்குக் குழியில் இருந்து தனக்கு தேவையானதை எடுத்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தின் பாசிட்டிவ்:
ஒவ்வொரு காட்சியிலும் தெரியும் பிரமாண்டம் படத்தின் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான பாசிடிவ் ஆகும். சீசர் இறந்த இடத்திலிருந்தே படத்தை தொடங்குவது, ரசிகர்களை நாஸ்டாலஜியாவாக உணர தூண்டுகிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் என டெக்னிகல் பிரிவில் படம் மிகவும் வலுவாக உள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் எதுவும் ஏற்படுத்தாமல், ஒரே நேர்க்கோட்டில் சொல்ல வந்த கதையை எளிதாக கூறியுள்ளனர். கோடைகாலகத்தில் குழந்தைகளுடன் சென்று பார்த்து பொழுதுபோக்க தேவையான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளன.
படத்தின் நெகட்டிவ்:
முதல் மூன்று பாகங்களை பார்த்துவிட்டு, நான்காம் பாகத்திற்கு செல்பவர்களுக்கு இது ஏமாற்றமளிக்க அதிக வாய்ப்புள்ளது. முந்தைய படங்களில் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த படத்தில் பிரமாண்டத்திற்கு அளித்த முக்கியத்துவத்தில் பாதி அளவிற்கு கூட கதைக்கு வழங்கவில்லை. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பெரிதும் ஒட்டாத நிலையில், 140 நிமிடங்கள் ஓடும் இந்த படம் மிக நீநீளமானதாக நீங்கள் உணரலாம். இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் வில்லன், பெரிய தாக்கம் ஏற்படுத்தாத ஒரு கேமியோ கதாபாத்திரம் போலவே உணரச்செய்கிறார். படம் முடியும் போது சீசர் கதாபத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தில், பாதியை கூட இந்த படம் நம்மில் ஏற்படுத்தி இருக்காது என்பதே உண்மை.
மொத்தத்தில் கோடை காலத்தில் குழந்தைகளுடன் சென்று பார்க்கக் கூடிய அம்சங்கள்டுடன் வெளியாகியுள்ள, கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படம் முந்தைய படங்களின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே உள்ளது.