(Source: ECI/ABP News/ABP Majha)
BOAT Movie Review: சிம்புதேவனின் போட் கரை சேர்ந்ததா? கடலில் மூழ்கியதா? முழு திரை விமர்சனம்
BOAT Movie Review: சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள போட் திரைப்படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக காணலாம்.
சிம்புதேவன்
யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், லீலா, சாம்ஸ், கௌரி கிஷன்
திரையரங்கம்
தமிழ் சினிமாவில் காமெடி பட இயக்குனர்கள் மிக குறைவானவர்களே. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிம்புதேவன். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த நிலையில், அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் போட்.
புலி படத்திற்கு பிறகு பெரியளவில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்க இயலாமல் இருந்த சிம்புதேவனை போட் கரை சேர்த்ததா? இல்லை மீண்டும் கடலில் தத்தளிகக விட்டதா? என்பதை கீழே காணலாம்.
கதைக்களம்:
ஒருபுறம் இரண்டாம் உலகப்போர், மறுபுறம் சுதந்திர போராட்டம் நடக்கும் 1943ம் ஆண்டே கதைக்களம் ஆகும். ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமின் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. இதையடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர்.
அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். அப்போது 6 பேர் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் ஏறிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாரா சிம்புதேவன்
நடுக்கடலில் உயிர் பயத்தில் 9 பேர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சந்திக்கும் இடர் என்ன? அந்த பேரிடரில் இருந்து அவர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்ன? படகில் இருக்கும் தீவிரவாதி யார்? உயிர் பிழைப்பதற்காக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மிருக குணம் அவர்களை எப்படி மாற்றுகிறது? அந்த தீவிரவாதியிடம் இருந்து எப்படி தப்பித்தனர்? என்பதை 2.30 மணி நேர படமாக தந்துள்ளார் சிம்புதேவன்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கதைக்களம் நகர்கிறது என்றால் அதற்கான திரைக்கதை வலுவாக இருந்தால் மட்டுமே படத்தை சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் சிம்புதேவன் இந்த சிக்கலான கதைக்களத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றுள்ளார்.
பலமாக நிற்கும் வசனங்கள்:
ஒரே ஒரு படகில் குமரனாக வந்து தனது அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் யோகி பாபு நம்மை கவர்கிறார். நூலகராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் யோகிபாபுவிற்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும். நடுக்கடல், படகு என்ற ஒரே லொகேஷனில் சலிப்பு தட்டாமல் கதைக்களத்தை நகர்த்தியதில் வசனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
1943 காலகட்டத்தில் நடைபெற்றாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத்தை தாங்கி நிற்பதே வசனங்கள்தான். இன்று நாம் சந்திக்கும் சிக்கல்களை பேசியிருப்பதும், இன்றும் மனிதர்களிடம் இருக்கும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை விலாவரியாக அழகாக ரசிக்கும் வண்ணம் வசனமாக எழுதியுள்ளனர்.
இசை எப்படி?
படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்ந்த நிலையில், இரண்டாம் பாதியில் உயிரை காப்பாற்றிக் கொள்ள யோகிபாபு விதிக்கும் நிபந்தனை என்ன? அவரது நிபந்தனைக்கு மற்றவர்கள் உடன்பட்டனரா? கடைசியில் அவர்கள் முடிவு என்ன? என்பதை மேலும் சுவாரஸ்யமாக்கி போட்டை முடித்துள்ளார் சிம்புதேவன்.
படத்தில் நடித்த யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், மதுமிதா, ஷாரா, கவுரி கிஷன், லீலா, சாம்ஸ் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வசனங்களும் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயராக நடித்த ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் நடிப்பில் அசத்தியுள்ளார். இதுபோன்ற படத்தில் பாடல்கள் என்பது ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடும். பின்னணி இசையில் ஜிப்ரான் அசத்தியுள்ளார்.
ஆனால், படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாக இருந்தாலும் அந்த பாடல் கர்நாடிக் கானா-வாக கொடுத்து ஜிப்ரான் அசத்தியுள்ளனர். கிளைமேக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட். இறுதியில் அழகான செய்தியுடன் உரிமையானவர்களுக்கு படத்தை சமர்ப்பித்து முடித்த விதம் பாராட்டுக்குரியது.
ஒளிப்பதிவு:
படத்தில் பிற்பாதியில் சில இடங்களில் வசனம் நீள்வது போல இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் அந்த குறையை போக்குகிறது. சிம்புதேவனின் படங்களுக்கு பலமே நகைச்சுவை. இந்த போட்டில் நகைச்சுவை பெரும்பாலும் காணவில்லை என்றே கூற வேண்டும். அதற்கு பதிலாக உணர்வுகளை கடத்தியுள்ளார். இதுபோன்ற சவாலான படத்திற்கு ஒளிப்பதிவு என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். அதை மாதேஷ் மாணிக்கம் மிக மிக அழகாக கையாண்டுள்ளர். நீளமான, நீல நிற கடலின் அழகை இரவிலும் பகலிலும் காட்டியிருப்பதுடன், ஒவ்வொரு கோணத்திலும் கதையை சலிக்காமல் நகர்த்திச் செல்ல அவரது கேமரா உதவியுள்ளது. இந்த படம் மூலமாக சிம்புதேவன் கண்டிப்பாக மீண்டும் கோலிவுட்டில் கரைசேர்ந்துள்ளார்.