News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

kolapasi Series 15 | குற்றால குளியலும் பார்டர் கடை பரோட்டாவும் - பொதிகை மலைச்சாரலில் உணவு உலா

’’இவர்களின் லாபம் பல ஆயிரம் கோழி வளர்க்கும் கிராமப் பெண்களுடன் பகிரப்படுவது கிராமப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் ஒரு காரியம் தான்’’

FOLLOW US: 
Share:

ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் செல்வது குறித்து திட்டமிடும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பொதிகை மலையை நெருங்க நெருங்க காற்றில் ஒரு ஈரம் தென்படும், நகரத்தின் பேரிரைச்சளில் இருந்து மனம் விடுபட்டு ஒரு மாய வெளிக்குள் நுழையும். பசுமையான மலைக்காடுகள், பறவைகளின் விதவிதமான ஒலிகள், மூலிகைகளின் மனம் என எல்லாம் புதுசாக உடலின் ஒவ்வொரு அணுவிலும் உற்சாகம் தொற்றும். குற்றாலச் சாரல் வந்து முகத்தில் படும் போது நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்பதை உணருவீர்கள். பேரருவி எனும் 'மெயின் ஃபால்ஸ்' ,  ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்டம் அருவி, புலி அருவி என அலைந்த படி இருப்போம். குற்றாலத்தில் இருக்கும் வரை ஒரு ராட்டினம் சுற்றுவது போல் எல்லா நடைமுறைகளும் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வரும். குளியல் சிறுதீனிகள் சோறு, குளியல் சிறுதீனிகள் சோறு என சுற்றிச் சுற்றி வருவோம், தேவைப்பட்டால் தான் உறக்கம். குற்றாலம் தமிழகத்தின் லாஸ் வெகாஸ், சீசன் நேரம் இரவெல்லாம் இந்த ஊர் விழித்திருக்கும்.


மாங்காயை  உப்பு மிளகாய் தூளில் தோய்த்து ஒரு கீத்தை வாங்கிக் கடித்துக் கொண்டே அங்கிருந்து பக்கத்தில் தள்ளு வண்டியில் பலாச்சுளைகள் விற்பவரிடம் சில சுளைகளை வாங்கி உள்ளே தள்ள ஆரம்பித்தீர்கள் எனில்  குற்றாலத்தின் ஆன்மாவிற்குள் நுழைந்து தரிசனம் தொடங்கி விட்டது என்று பொருள். சட்டென பேரருவியில் ஒரு குளியல் முடித்ததும் குற்றாலநாதர் கோவில் வாசலில் வரிசை கட்டி நிற்கும் கடைகளில் நுழைய வேண்டும்.  மிளகாய் பஜ்ஜி, சூடான வடைகள், போண்டா என இடைவெளி விடாமல் அடுத்த சுற்று சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிடும் போதே தேங்காய் எண்ணெயின் வாசம் மூக்கை துளைக்கும், உடன் சேட்டன் கடைக்கு சென்று முதலில் அவர்கள் நேந்திரம் காயை சீவுவதை வேடிக்கை பார்க்க வேண்டும், அவர் கை எங்கோ இருக்கும் ஆனால் அவரது கையில் இருந்து அப்படியே காற்றில் மிதந்து எண்ணெய் சட்டியில் வந்து அவர் சீவும் வாழைக்காய் வட்ட வட்டமாக வந்து விழும். பழ சிப்ஸ், மசாலா சிப்ஸ் என கணக்கில்லாமல் சாப்பிட வேண்டும். ஒரு பாக்கெட் உப்பேரி வாங்கி கைவசம் வைத்துத் கொள்வது செரிமானத்திற்கு உதவும்.


அங்கிருந்து ஐந்தருவிக்குச் சென்று ஒரு குளியல், அங்கே வரிசையாக பழக்கடைகள் இருக்கும். பம்ப்ளிமாஸ், பேசன் ப்ரூட், முட்டைப் பழம், மலைக் கொய்யா, மலை ஆரஞ்சு, ஐஸ் பன்னீர் பழம், ஸ்டார் ப்ரூட், நெய் சீத்தாப்பழம்,  நோனிச் சீத்தா, மலை சப்போட்டா, மலை வாழை, மங்குஸ்தான், ரம்புட்டான், கிர்னி பழம், டுரியான் பழம் என வண்ணங்களின் கோலமாக இந்த பழங்கள் காட்சியளிக்கும். உங்கள் விருப்பம் போல் பழங்களை வாங்கி வெட்டி வெட்டி மகிழலாம், பொதுவாக குற்றாலம் செல்லும் போது ஒரு சமையல் கத்தி கையில் இருப்பது நல்லம். நடுவில் அவ்வப்போது ஒரு சூடான தேநீர் வாங்கி குடியுங்கள், குற்றாலம் சென்று விட்டாலே எல்லாம் ருசியாக இருக்கும். காற்று, மணம், சாரல் எல்லாம் நம்மை இளமையாக மாற்றும், அங்கே இருக்கும் இரண்டு மூன்று நாட்களும் உங்கள் வயது குறைந்துள்ளதை உணருவீர்கள்.

காலையிலேயே அங்கே அற்புதமான சைவ-அசைவ சிற்றுண்டிகள் கிடைக்கும். மல்லிச் சட்டினி, தக்காளிச் சட்டினி, காரச் சட்டினி என அசத்துவார்கள். நான் எப்பொழுதும் வடக்கு சன்னதி தெருவில் உள்ள சிறிய சிறிய கடைகளுக்குச் செல்வேன். அவை அனைத்துமே வீட்டு சமையல் போலவே ருசியாகவும் உடலுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாத உணவுகளாக இருக்கும். மீண்டும் மெயின் ஃபால்சில்  ஒரு குளியல் போட்டு வந்து வரிசையாக இருக்கும் அல்வா கடைகளில் முந்திரி அல்வா, அண்ணாச்சி அல்வா, கேரட் அல்வா என ஒரு கை பார்க்க வேண்டும். மதியச் சாப்பாடு என்றாலே மீளவட்டான் பஜாரில் உள்ள பாண்டியன் லாட்ஜ் மிலிட்டரி ஹோட்டல் தான்.  அசைவ உணவுகளை வீட்டு சமையல் ருசியுடன் சாப்பிட இந்த ஹோட்டல் பெயர்போனது. மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, ஈரல், சுவரொட்டி, மூளை, பிரியாணி என காலை 8 முதல் இரவு 10 வரை இந்தக் கடையில் சுவையான உணவு கிடைக்கும், ஆனால் சீசன் நேரத்தில் இடம் கிடைக்குமா என்பது நீங்கள் போகும் நேரத்தைப் பொறுத்தது.


அடுத்து பழைய குற்றாலம் நோக்கி படையெடுக்க வேண்டும். ஒரு நல்ல குளியல் போட்டு விட்டு நொங்கு போட்ட பதநீரை வாங்கிக் குடிக்க வேண்டும், கொஞ்சம் நொங்கு ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களே அழகாக அதை பனை ஓலையிலேயே கட்டிக் கொடுப்பார்கள். பழங்குடிகளே மலையில் இருந்து கொண்டு வந்து தேன் விற்பார்கள், நல்ல மலைத்தேன் இரண்டு மூன்று பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் இலஞ்சி அல்லது காசிமேஜர்புரம் பக்கம் ஒரு நல்ல நடைக்குச் செல்ல வேண்டும். ஏராளமான மருத்துவ குணமுள்ள மூளிகைகளை ஆங்காங்கே பாக்கெட் போட்டு வைத்திருப்பார்கள், விபரம் கேட்டு அதை வாங்கி வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் நெருக்கடியான நேரங்களில் பயன் தரும்.

குற்றாலத்தின் அடுத்த இலக்கும் உணவு தான், இந்தக் கடையின் வாசலுக்கு வந்தால் இதுவரை எந்த அருவியிலும் பார்க்காத கூட்டம் இங்கே இருக்கும். காலை முதல் நீங்கள் வெவ்வேறு அருவிகளில் பார்த்தவர்களை எல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடைக்கு சென்ற போது அங்கு அலைமோதிய கூட்டத்தைப் பார்த்து எனக்கு வந்த சந்தேகம் என்னவெனில், இந்த மொத்தக் கூட்டமும் குற்றாலத்திற்கு குளிக்க வந்ததா? இல்லை இந்தக் கடையில் சாப்பிட வந்ததா என்று. வாகனத்தை நிறுத்தி, ஹோட்டலுக்குள் சென்று ஒரு இடத்தைப் பிடித்து சாப்பிடுவது எல்லாம் சுலபம் அல்ல- இந்த நேரத்தில் ஏதாவது ஒரு கட்சியில் எம்.எல்.ஏ சீட்டு வாங்கிவிடலாம். 


பார்டர் கடை எனும் என் குலதெய்வக் கோவிலுக்கு செல்லும் போது எல்லாம் நான்  பார்டர் கடையின் தலைமைப் பூசாரி ஷேக் அப்துல்லா அவர்களுடன் கொஞ்சம் நேரம் உரையாடுவேன், நலம் விசாரிப்பேன்.  நாங்கள் உரையாடும் போது எங்கள் பின்னணியில் பரோட்டா யாகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் பீரனூர் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கப்படுகிறது. வாகனங்கள் சூழ் இடமாக பீரனூர் பார்டர் மாறுகிறது. இதைக் கவனித்து வந்த முகம்மது ஹசன் அவர்கள் 1974ல் இந்த இடத்தில் நாம் ஒரு நல்ல உணவகத்தை ஆரம்பித்தால் என்ன என்று முடிவு செய்கிறார். ரஹ்மத் ஹோட்டலைத் தொடங்குகிறார், அன்று முதல் தொடர்ச்சியாக இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் தேசிய உணவாகவே மாறிவிட்ட பரோட்டாவும் இவர்கள் வீட்டு பெண்களின் கைவண்ணத்தில் தயாராகும் மசாலாவில் செய்யப்படுகிற சால்னாவும் இங்கே பிரதான உணவு, இந்த ருசியில் ஒரு  சால்னாவை தமிழகத்தில் வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை. எனது விருப்பம் என்பது இவர்களின் பிச்சிப்போட்ட மிளகு சிக்கன், நாட்டுக்கோழி ஃப்ரை மற்றும் காடை, இயற்கையான நறுமணப் பொருட்களும் சுத்தமான தேங்காய் எண்ணெயும் இணையும் போது வரும் சுகந்தம் இருக்கே, அப்படியே அந்த நாட்டுக் கோழியை காதலிக்கத் தொடங்கி விடுவீர்கள். ஒரு முறை சாப்பிட்டால் அடுத்த வருட சீசன் வரை நம்மை அது குற்றாலம் நோக்கி அழைத்துக் கொண்டேயிருக்கும். எத்தனை பெரும் வியாபாரமும் கூட்டமும் அலைமோதுகிற போதும் கடையை அத்தனை எளிமையாக வைத்திருக்கிறார்கள். 

1974 முதலே நாட்டுக் கோழி என்பது இவர்களின் கொள்கைகளில் ஒன்று, இத்தனை பெரும் கூட்டத்திற்கு  நாட்டு கோழியை எப்படி இவர்களால் தர முடிகிறது என்பது என்றுமே எனக்கு ஒரு சந்தேகமாக இருந்து வந்தது. கிராமங்களில் வளர்க்கப்பட்டு  பிரதான சந்தைகளுக்கு வரும் நாட்டுக் கோழிகளை இவர்களின் வியாபாரிகள் தென் தமிழகம் எங்கும் கொள்முதல் செய்கிறார்கள். பிராய்லர் என்பது முற்றிலும் பெருவணீகத்தின் தொழில் நுட்பமாகவும் நிச்சயம் ஆரோக்கியமானதாகவும் இல்லாத சூழலில் இவர்களின் நாட்டுக் கோழி எனும் கொள்கை நிச்சயம் ஏராளமான கிராமங்களில் கோழி வளர்ப்பவர்களுக்கு ஒரு ஊக்கத்தையும் வருமானத்தையும் தரும் விஷயம் தான், இவர்களின் லாபம் பல ஆயிரம் கோழி வளர்க்கும் கிராமப் பெண்களுடன் பகிரப்படுவது கிராமப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் ஒரு காரியம் தான்.  உணவை சாப்பிட்ட பின் வாடிக்கையாளர் மனம் விரும்பி பணத்தை செலுத்தும் போது அது இருவருக்கும் ஒரு நிறைவான அனுபவமாக மாறுகிறது. இன்றைய பெருநகர அசைவ உணவுக் கடைகளில் நாம் பல நேரங்களில் பணத்தை மனமில்லாமல் செலுத்திவிட்டு வருகிறோம், ஒரு நல்ல  அனுபவத்தை பெரிய நிறுவனங்கள் தருவதற்கு சிரமப்படுகிறார்கள், நமக்கும்  மனநிறைவான  தருணம் அமைவது அரிதாகிவிட்டது.  

இந்தச் சூழலில் அடக்கமான விலையில் வரும் வாடிக்கையாளர்களின் மனங்களை வெல்வது அத்தனை சுலபமான காரியம் இல்லை. 1974 முதல் இவர்களின் கடைக்கு விளம்பரமே கொடுத்ததில்லை என்பது இவர்களின் சிறப்பு. அற்புதமான உணவு கைவசம் எனில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்தக் கடையின் விளம்பரதாராக, பார்டர் கோழிகளின் தூதனாக மாறுகிறார். உங்கள் உடலில் இருந்து ஆவி பரலோகத்திற்கு ட்ராவல் ஆக வேண்டும் எனில் மெயின் ஃபால்சில் குளித்து விட்டு பார்டர் கடையில் பெப்பர் சிக்கன் ஒன்றை வாங்கிச் சாப்பிடுங்கள், உங்கள் தொலைபேசிக்கு ஓடிபி வந்துவிடும். 


பார்டர் கடை குற்றாலப் பயணத்தின் மிக முக்கிய சங்கமம். எனக்கு குற்றாலமே ஒரு விசேஷ வீடு போலவே காட்சியளிக்கும்.  பல குடும்பங்களை மீண்டும் மீண்டும் வேறு வேறு அருவிகளில் சந்திப்போம், சாதி மதங்களைக் கடந்து மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்கத் தொடங்குவார்கள், பேசிக் கொள்ளத் தொடங்குவார்கள். அங்க தண்ணி வருதா, இங்க தண்ணி வருதா, எங்கிருந்து வர்றீங்க, எங்க தங்கியிருக்கீங்க, வருசாவருசம் ரெகுலரா வருவீங்களோ என உறவுகள் மலரும் அற்புத நிலம் தான் இந்த பொதிகை. பொதிகை மனித மனங்களை புத்துணர்வளித்துத் தூய்மைப்படுத்துகிறது. 

ஒவ்வொரு முறையும் மனமில்லாமல் தான் குற்றாலத்தில் இருந்து விடைபெற்றுக் கிளம்புவேன். சரி புண்பட்ட மனதை தென்காசி நந்தினி கூரைக்கடையின் கருவாட்டுக் குழம்பில் சரி செய்ய முயலுவேன். சரிவரவில்லை எனில் மட்டன் சுக்கா, மீன் வருவல், சுவரொட்டி, ஈரல் என மனதைத் தோற்ற முயற்சிப்பேன். வயிற்றில் இடம் இருந்தால் விநாயகா மெஸ் தோசைக் கடைக்குச் சென்று அவர்களின் 50 வகை தோசைகளை சுவைத்து விட்டு ஊருக்குக் கிளம்பலாம். நம் வீடும் ஊரும் நெருங்க நெருங்க பெரும் பற்சக்கரங்களின் உருளும் ஒலி நம் காதுகளை வந்தடையும், காற்றில் வாகனப் புகை வீச்சமடிக்கும், ஒரு கனவில் இருந்து விடுபட்டு நகரங்கள் எனும் நரகங்களுக்குள் நுழைவீர்கள், நுழைந்து தான் ஆக வேண்டும். சரி விடுங்க, அடுத்த சீசன் சீக்கிரமே வந்துவிடும். 

கொலபசி தொடரின் முந்தய தொடர்களை சுவைக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

Published at : 11 Feb 2022 10:22 AM (IST) Tags: courtallam Tenkasi Poultry Kolapasi Kola Pasi Food Series A.Muthukrishnan Baroda Border Shop Pepper Chicken Broiler Chicken Rural Economy

தொடர்புடைய செய்திகள்

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

டாப் நியூஸ்

'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !

'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

Breaking News LIVE: சென்னையில் கடைக்குள் புகுந்து ரகளை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking News LIVE: சென்னையில் கடைக்குள் புகுந்து ரகளை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு