Finger Millet Roti: இட்லி தோசையை ஓரம் கட்டும் ராகி அடை.. 100 % ஆரோக்கியம்.. டக்குனு எப்படி செய்வது? ரெசிபி இதோ..
வீட்டில் வழக்கமான இட்லி தோசை இல்லாமல் மிகவும் ஆரோக்கியமான ராகி அல்லது கேழ்வரகு அடையை எப்படி செய்வது என விரிவாக பார்க்கலாம்.
கேழ்வரகு என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு சிறுதானியமாகும். கேழ்வரகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவாக இருக்கும் என கூறுவது உண்டு. ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான உணவு. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் கேழ்வரகை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களை குணப்படுத்த உதவும்.
இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை அடை செய்து கொடுத்தால், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா என இல்லாமல் இப்படி வித்தியாசமாக சமைத்துக் கொடுக்கலாம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ராகி அடை செய்து கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிது. 10 நிமிடத்தில் சுவையான கேழ்வரகு அடையை எப்படி செய்வது என விரிவாக பார்க்கலாம்.
கேழ்வரகு அடை செய்ய தேவையான பொருட்கள்:
- கேழ்வரகு
- பச்சைமிளகாய் அல்லது காய்ந்த சிவப்பு மிளகாய்
- வெங்காயம்
- கறிவேப்பிள்ளை
- முருங்கை கீரை (விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
- உப்பு
- நல்லெண்ணெய் அல்லது நெய்
- தண்ணீர்
கேழ்வரகு அடை செய்முறை:
முதலில் அரைத்து வைத்த கேழ்வரகு மாவு அல்லது கடையில் கிடைக்கும் கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். கேழ்வரகு மாவு எடுத்த அதே அளவு வெங்காயம் சேர்க்க வேண்டும் அப்போது தான் அடையின் சுவை கூடுதலாக இருக்கும். பின் அதில் காரத்திற்கு ஏற்ப நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும். விருப்பப்பட்டால் முருங்கை கீரை சிறிதளவு சேர்க்கலாம். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு போல் இறுக பிசையாமல் சற்று தளர்வாக பிசைந்தால் அடை மெல்லிசாக வரும். ஈரமான துணி அல்லது ஈரமான இட்லி துணியில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக எடுத்து, அடை வடிவில் தட்ட வேண்டும். மெல்லிசாக தட்ட வேண்டும். தோசைக்கல்லில் எண்ணேய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் அதில் மெல்லிசாக தட்டிய அடையை அப்படியே துணியை வைத்து போட வேண்டும். தோசைக்கல்லில் அடை போட்டத்தும் துணியை தனியாக எடுக்க வேண்டும். அனுபவம் இருப்பவர்கள் நேரடியாக தோசைக்கல் சூடானதும் அதில் உருண்டையான அடை மாவை மெல்லிசாக தட்டி எடுத்துக்கொள்ளலாம். மிதமான தீயில் இரு புறமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். ருசியான அட்டகாசமான ஆரோக்கியமான கேழ்வரகு அடை தயார். இந்த கேழ்வரகு அடையுடன் வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, சாம்பாரை தொட்டு சாப்பிடலாம்.
சென்னை மற்றும் புறநகரில் காபி ஷாப் வைக்க ஆசையா? அரசு தரும் மானியம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?