Chippiparai : 'எதிரிகளை அச்சப்பட வைக்கும் உடல் வாகு’ கன்னி, சிப்பிப்பாறை நாய்களின் அமைப்பு..!
காடுகளில் வேட்டை என்றால் களத்தில் பாய்ச்சல் காட்ட பின்னட்டங்கால் வலு மிக அவசியம். போக அது தான் பிட்டி பிடிப்பு உள்ள பரும் உடல் கட்டு கொண்ட நாய்களின் குறுக்கை தாங்கவல்லது
வேட்டைத்துணைவன் - 24
சிப்பிப்பாறை / கன்னி நாய்கள் பகுதி : 16
கடந்த கட்டுரையில் பார்த்த நமது சிப்பிப்பாறை / கன்னி நாய்களின் உடல் அமைப்பு குறித்தான பகுதியின் தொடர்ச்சியினை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
கை கால் சுத்தம் :
இது சீரான எலும்பு அமைப்பைக் குறிக்கும் சொல். உடல் சட்டத்தை அல்ல ! “கை கால்” என்பது நான்கு கால்களையே ! “அந்த நாயப் பாத்திங்களா நல்ல பாத மிதி உள்ள நாய்” என்பார்கள். அழுத்தமான பாத மிதி உள்ள நாய்களே வலுவான உடலுக்கு உத்திரவாதம். பாதமானது பறந்து தரை அழுத்த இருக்கவேண்டும். அப்படி நாய்களில் பார்க்கப்படும் வேறு ஒன்று “கால் கனம்” இது பாதத்தில் இருந்து கால் முட்டு வரை உள்ள எலும்பு கனத்தைக் குறிக்கும் சொல். நல்ல கால் கனம் உள்ள நாய்கள் நல்ல எலும்பு சட்டத்துக்கு பொருத்தமாக இருக்கும்.
முன் உடல் சட்டத்திற்கு முன்னட்டங்கால்கள் எப்படியோ அப்படித்தான் பின் சட்டத்திற்கு பின்னட்டங்கால்கள். மேலும் வீதி உள்ள காடுகளில் வேட்டை என்றால் களத்தில் பாய்ச்சல் காட்ட பின்னட்டங்கால் வலு மிக அவசியம்.போக அது தான் பிட்டி பிடிப்பு உள்ள பரும் உடல் கட்டு கொண்ட நாய்களின் குறுக்கை தாங்கவல்லது.
அதற்கு ஒரு அமைப்பு வேண்டும் அல்லவா ! அதை “கூனு கால்” என்பார்கள். “மொசக் கால்” என்று அதைச் சொல்வோரும் உண்டு. அதாவது பின் கால்கள் முன் கால்களைப் போல நேராக அல்லாமல் சற்று பின்னால் வளைந்து இருக்கும். அதுவே சிறப்போன “கூனுக்கால்” நாய். அந்த வளைவு இல்லாமல் வரும் நாய்கள் “ நட்டுகால் நாய்கள்”
நகம் :
நகம் பார்த்தாலும் ஒரு காலத்தில் முக்கியப் பங்கு கொண்டிருந்தது உண்டு. சில இனவழிகளில் ஓரிரு நகங்களில் வெள்ளை விழும் அதை வைத்தே நமது பழைய வழி நாய் ஒன்றின் சாயல் இறங்கி இருக்கிறது என்று சொல்வோரும் உண்டு. இருந்தும் முழுவதும் கரு நகம் உள்ள நாய்களுக்கு ஒரு காலத்தில் சிறப்பான இடம் இருந்தது என்பது வாஸ்தவம் தான்.
நெஞ்சடி :
உலகம் முழுவதும் உள்ள இவ்வகையை ஒற்ற sighthound களுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை அதனுடைய முகம், வயிறு மிக முக்கியமாக நெஞ்சு. இவை பருவேட்டை போல அல்லாமல் வெகு தூரம் துரத்தி வேட்டையாடுபவை என்பதால் ஒட்டத்துக்கு தகுந்த வலுவான நுரையீரல் தேவை. அதற்கு நல்ல திடமான இறங்கிய நெஞ்சு தேவை.
இவற்றில் அளவான நெஞ்சடி கொண்ட நாய்களுக்கு பெரும்பாலும் நல்ல உடல் அழுத்தமும் சித்திரமும் கூடி வரும். இங்கு அழுத்தம் என்பது இறுக்கம். சிலருக்கு உடல் அழுத்தம் என்ற ஒன்றே மிகப்பெரிய நிறைவை தர வல்லதாக இருந்திருக்கிறது. எனது குருநாதருக்கும் கூட அதுவே பிரதானம்.
அதுவே வடிவ நேர்த்தியோடு வளைவு கொண்டு வந்தால் அதை “தேன்கூடு நெஞ்சு” என்பர். இவை பெரும்பாலும் அவனான உயரம் உள்ள நாய்களில் அமையும். அதுவே நல்ல அகலமான நெஞ்சாக வாய்த்தால் நல்ல அடமான நெஞ்சு என்பார்கள். அடமான நெஞ்சு வாய்க்கப்பெற்ற நாய்கள், நல்ல அடமான உடல் அமைப்பு கொண்ட நாய்களாகவும் இருக்கும்.
முட்டு வரை இறங்கிய நெஞ்சு உள்ள நாய்களுக்கு ஓட்டத்தின் போது உராய்வு ஏற்பட்டு ஓட்டம் சிக்கலாகும் என்று சொல்வோரும் உண்டு. அப்படி இருக்க வாய்ப்பு இல்ல என்பதே என் கருத்து.
நெடுவடம் :
இன்று நாய்களில் உயரம் பார்த்தல் என்பது மிகப் பிரதானமான நோய்க் கூறாக உருவெடுத்து நாய்களை அழித்து வருகிறது. காரணம் இந்த நாய்கள் எந்த தேவைக்கு பயன்படுத்தினர் என்பதே பலர் அறியாததும். அறிந்தும் தெளிவு பெறாததும்தான். இது உயர அடையாளம் கொண்ட நாய் இனம் அல்ல !
இன்னமும் ஒரு நாயை ஓட்டம் பார்க்க சுட்டும் பழைய ஆள்கள் நாய் நல்ல நெடுவமான நாய் என்பார்களே தவிர உயரத்தை அல்ல ! சரி அப்படி என்றால் ஒரு நாயில் நெடுவம் எப்படி இருக்க வேண்டும்?
அந்த நாயினுடைய உயரத்தை விட அதனுடைய நீளம் கூடுதலாக இருத்தல் வேண்டும். இது ஒரு அளவான உயரம் கொண்ட நாய்களில் வாய்க்கும் போது மட்டுமே கச்சிதமும் அழகும் கூடி வரும். யோசித்துப் பாருங்கள் அதிகப்படியான உயரமும் அதை மிஞ்சும் நீளமும் இருக்கும் நாய்களின் நடை எப்படி இருக்கும். இறுக்கம் குறைந்து நடை உடையும் அல்லவா !
வயிறு :
நெஞ்சில் இருந்து சட்டென்று உள்ளவங்கும் வயிறு இவ்வகை நாய்களுக்கு உண்டு. நன்கு உள்ளாவங்கிய வயிறை நல்ல நெஞ்சு இரக்கம் உள்ள நாய்களிலும் , ஒற்றைக் குறுக்கு உள்ள நாய்களிலும் தெளிவாகப் பார்க்கலாம். வயிற்றின் ஓரத்தில் ஜவ்வு போடாத நாய்கள் ஓட்டத்திற்க்கு மிகச் சிறப்போன நாய்களாக அமையும்.
முகம் / மற்றும் தலை :
“மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாத” என்ற சொலவடையை இதை குறிவைத்துத் தான் சொன்னார்களா என்று தெரியவில்லை. உலகம் முழுக்க உள்ள sight hound களின் பொது முகம் இதுவே. நல்ல கூரான முகம். நமது நாய்களுக்கும் இவ்வாறே என்றாலும் நாம் இந்நாய்களை தொடர்ந்து நமது தேவை பொறுத்து கலந்து உருவாக்கி உள்ளோம் என்பதை சின்ன மாறுதல்கள் அந்த தலை அமைப்பிலும் உண்டு.
பொடி தல என்பது பொதுவில் நல்ல பெயர். நாய்களின் பெருமை பேசுபவர்கள் எல்லாம் சொல்லும் ஒரு பழைய வாசகம் உண்டு. “ நம்ம நாய் டீ கிளாஸ்ல சோறு வச்சாலும் சாப்புடும்” – முகம் அவ்வளவு கூர் – தலை அவ்வளவு பொடி ! இன்னமும் ஒரு வாசகம் உண்டு. “பொம்பளைக போடுற வளையல நாய் தலை வழியா போட்டா கழுத்து வரைக்கும் போயிரும்” அவளோ பொடி மண்ட நாய். கொஞ்சம் உயர் நவிச்சி தான்.
பொடி தலை நாய்களும் உண்டு தான் அதே வேலையில் இங்கு பருமண்டை நாய்களும் உண்டு. இந்நாய்களின் தலை கொஞ்சம் அளவில் பெரியது. அதே நேரம் இவை நீளமான முகமும் கொண்டது. பின் தலை மட்டும் பருந்தலையாகவும் முன் முகம் பொடியாகவும் வந்தால் அதை மேல் மண்டை பருமண்டை என்பார்கள். அந்த நீளம் குறைந்து வந்தால் அதை கட்டு மூஞ்சு நாய்கள் என்பார்கள். இந்தப் பருந்தலை – கட்டு மூஞ்சி நாய்கள் பெரும்பாலும் ரெட்டை குறுக்கு நாய்களில் வாய்க்கும். இன்னமும் உண்டு.. பார்க்கலாம்.