வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை; விண்ணப்பிக்க வரும் 30 கடைசி நாள்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி கூறியதாவது;
பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி, பட்டமளிப்பு கல்வி தகுதி தேர்ச்சி, பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களாக இருப்பவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கும் மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே உதவி தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தவறியவர் மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலை கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்படும்.
அதேபோல் மாற்றுத்திறனாளிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட தகுதி உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பித்திலோ அல்லது வேலைவாய்ப்புதுறை இணையதளத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது ஜெராக்ஸ் நகல் எடுத்து விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து ஆர்ஐஆல் அல்லது உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தாங்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை நேரில் அளிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

