ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரியாக உள்ளது எனவும் கார் உற்பத்தியில் நாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளர்.
தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயில் டாடா கார் ஆலை அமைத்து, 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பகுதியில் புதிய கார் தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களைத் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.
விழாவில் பேசும்போது, ’’உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரியாக உள்ளது. வாகன உற்பத்தியில் நாட்டின் தலைநகரமாக தமிழ்நாடே உள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளர். பல்வேறு துறைகளில் டாட்டா நிறுவனம் தடம் பதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விழாவில் மேலும் அவர் பேசியதாவது:
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், இந்த விழாவில் பங்கேற்று இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது ! நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே இது கிடைத்திருக்கக்கூடிய பெருமை!
வேளாண் குடும்பத்தில் பிறந்து பெருமைமிகு அரசுப் பள்ளியில் படித்த இவர், இந்தளவுக்கு உயர அவருடைய தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன்!
நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.