Crime: லிப்ட்டு கேட்டு நடித்து கத்தியால் குத்தி பணம் வழிப்பறி - விழுப்புரம் அருகே பரபரப்பு
லிப்ட்டு கேட்டு இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்தவர் திடீரென ஜெய்சங்கரின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
லிப்ட்டு கேட்டு வழிப்பறி
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை லிப்ட்டு கேட்டு நடித்து கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு 7000 ரூபாய வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் தனியார் நிறுவனத்தில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை செய்யும் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நள்ளிரவில் செஞ்சி பகுதியிலிருந்து கலெக்க்ஷன் முடித்துவிட்டு சொந்த ஊரான ஆசூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது தென்பேர் என்ற இடத்தில் ஒருவர் லிப்ட்டு கேட்டு இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். திடீரென ஜெய்சங்கரின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
கழுத்தில் கத்தியால் குத்தி பணம்பறிப்பு
இதில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்ததையடுத்து அவர் வைத்திருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு லிப்ட்டு கேட்டு வந்த ஆசாமி தப்பியுள்ளார். பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருசக்கர வாகனத்தில் லிப்ட்டு கேட்டு நடித்து கழுத்தில் கத்தியால் குத்தி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.