Crime : பதைபதைக்க வைக்கும் கொடூரம்.. துப்பாக்கியால் சுடப்பட்டு தரதரவென இழுத்து செல்லப்பட்ட நாய்கள்.. நடந்தது என்ன?
GSL மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் பிறகு, 10 நாய்கள் மற்றும் 2 நாய்க்குட்டிகளின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ஆந்திராவில் ராஜாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பல நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாய்களை இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் செல்லும் கொடூர வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்கள் மீது தாக்குதல்
நாய்கள் மீது மனிதர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த சம்பவங்களுக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் அவற்றை கண்டு சிலர் அஞ்சுவதில்லை. நாய்களுக்கு வெறி பிடித்திருக்கும் பட்சத்திலும் அதனை நகராட்சிக்கு தகவல் அளித்து பிடிக்க செய்வதே சரியான நடைமுறை. கேரளாவில் சமீபத்தில் நாய்களுக்கு வெறி பிடித்த நிலையில் அரசே அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் யார் அனுமதியும் இன்றி நாய்கள் கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளன. GSL மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் பிறகு, 10 நாய்கள் மற்றும் 2 நாய்க்குட்டிகளின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது குறித்து ராஜநகரம் காவல் நிலையத்தில் விலங்குப் பிரியர்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீதும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும் ஆயுதச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடந்துவருகிறது
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாய்கள் மற்றும் குரங்குகள் "சிக்கல்களை உருவாக்குவதால்" பல ஆண்டுகளாக நாய்களைக் கொன்று வருவதாக வளாகத்திற்கு வந்து குற்றம் செய்த நபர்கள் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு
ராஜாநகரம் காவல் ஆய்வாளர் காசி விஸ்வநாத் கூறுகையில், நாய்களைக் கொல்வது சட்ட விரோதமானது என்றும், தெருநாய்கள் பிரச்னையை ஏற்படுத்தியிருந்தால் அவற்றை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். குற்றச் செயல்களில் லைசன்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
கிழக்கு கோதாவரியில் உள்ள விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்தின் செயல் செயலாளர் விஜய் கிஷோர் அளித்த புகாரின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் நிர்வாகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்படவில்லை
கிழக்கு கோதாவரி மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி பி.ஜெகதம்பா தி பேசுகையில், "நாய்களை வேட்டையாடவோ கொல்லவோ அல்லது நாய்களை ஒழிக்க ஜிஎஸ்எல் வளாகத்தில் ஆயுதங்களை பயன்படுத்தவோ நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை. இப்பிரச்னை விசாரிக்கப்பட்டு வருகிறது”, என்றார்.