க்ரிப்டோ கரன்சியில் அதிகளவில் முதலீடு... 700 முதலீட்டாளர்களை முதல் கட்டமாக சுற்றி வளைக்கும் மத்திய அரசு..
க்ரிப்டோ கரன்சியில் அதிகளவில் முதலீடு செய்துள்ள 700 முதலீட்டாளர்களைக் கண்டறிந்துள்ள வருமான வரித்துறையினர் அடுத்த கட்டமாக இந்த 700 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிக மதிப்பு கொண்ட க்ரிப்டோ கரன்சியில் அதிகளவில் முதலீடு செய்துள்ள 700 முதலீட்டாளர்களைக் கண்டறிந்துள்ள வருமான வரித்துறையினர் அடுத்த கட்டமாக இந்த 700 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் இணைய வழியான டிஜிட்டல் சொத்துகளின் கணக்குகளையோ, அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தை வெளிப்படுத்தாதவர்களாகவோ இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிக பணம் வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது 30 சதவிகிதம் வரி, அபராதம் மற்றும் வட்டி முதலானவை வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கூறியுள்ளார். அதில் அவர், `க்ரிப்டோ கரன்சி மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரி செலுத்தாத நபர்களின் நீண்ட பட்டியல் ஒன்று கிடைத்துள்ளது. முதல் கட்டமாக, அதிகளவிலான தொகையை வரி செலுத்தாத 700 பரிவர்த்தனைகளைப் பட்டியலிட்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக இந்தப் பட்டியலில் இதுவரை வரி செலுத்தாத மாணவர்கள், இல்லத்தரசிகள் முதலானோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் இத்தகையோரின் பெயர்கள் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பிட்காயின், ஈத்தர்யம் முதலான க்ரிப்டோ கரன்சி, டிஜிட்டல் சொத்துகள் முதலானவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது 30 சதவிகித வரி விதிப்பதாக இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் சொத்துகளின் விற்பனை காரணமாக ஏற்படும் இழப்புகளைப் பிற வருமானங்களோடு சேர்க்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
க்ரிப்டோ கரன்சி, டிஜிட்டல் சொத்து ஆகியவற்றில் அதிகளவிலான பரிவர்த்தனை மேற்கொண்டவர்களின் பட்டியலில், சிலரின் மொத்த லாபம் சுமார் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதோடு, அதனை மேற்கொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் வருமான விவரங்களை அளிக்காததோடு, சிலர் வருமானமே இல்லை எனவும் கூறியிருந்தனர்.
கடந்த மாதம் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தினமும் க்ரிப்டோ கரன்சியில் முதலீடுகளில் ஈடுபடும் பலரும் தங்கள் வருமான விவரங்களை அளிக்கவில்லை எனவும், அவர்களின் விவரங்களை வருமான வரித்துறை சேகரித்துள்ளதோடு, வரும் மார்ச் 31க்குப் பிறகு வருமான வரித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
கடந்த மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் சொத்துகளுக்கான புதிய விதிமுறைகளின் கீழ் அபராதம் விதிப்பதோடு, வருமான வரித்துறை சார்பில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக தண்டனைக் கட்டணம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.