Pakistan Semi Final Chance: காப்பாத்துங்க.. வங்கதேசத்திற்காக வழிபடும் பாகிஸ்தான்.. குறுக்கே வரும் நியூசிலாந்து!
Champions Trophy Semi Final 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியை பாகிஸ்தான் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Champions Trophy Semi Final 2025: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கே பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கதேசம் - நியூசிலாந்து:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த முதல் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அணி, துபாயில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோற்று ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இன்று நடக்கும் நியூசிலாந்து - வங்கதேசம் போட்டியை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஏனென்றால், இந்த போட்டியின் முடிவே பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.
பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான அரையிறுதிக்குச் செல்ல?
தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குச் செல்ல இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்த வேண்டும்.
அப்படி, நியூசிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்தினால் அடுத்து நடக்கும் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
மேலே கூறிய இரண்டு விஷயங்களும் நடந்தாலும் மார்ச் 2ம் தேதி நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியை மிகப்பெரிய ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்த வேண்டும்.
மேலே கூறிய விஷயங்கள் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
தோல்வியின் பிடியில் வங்கதேசம்?
ராவல்பிண்டியில் இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் வங்கதேசம் அணி தற்போது வரை 139 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இதுவரை அங்கு நடந்த போட்டிகளில் சேசிங் மிகவும் எளிதாகவே அமைந்துள்ளது. இதனால், நியூசிலாந்து அணி வங்கதேசம் நிர்ணயிக்கும் இலக்கை சேஸ் செய்ய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு இன்றைய போட்டியில் வங்கதேசம் அணி தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் தொடரை விட்டு வெளியேறும். பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்ததால் அந்த நாட்டு ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். இன்று வங்கதேசம் அணி தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறி ரசிகர்கள் மிகவும் வேதனை அடைவார்கள்.


















