”அப்பா நான் போறேன்” தவெக தாவும் ரவீந்திரநாத்? மன வேதனையில் OPS
விஜயின் தவெகவில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இருந்த சி.டி நிர்மல்குமார் உட்பட சில முக்கிய புள்ளிகள் இணைந்திருக்கும் நிலையில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அரசியல் களத்தை பரபரப்பாகி இருக்கிறது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை பிடிக்காமல் வெளியே வந்த சில அதிமுகவின் முன்னாள் முக்கிய புள்ளிகளும் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாக்கும் தகவல் EPS ஆதரவாளர்களிடம் சூட்டை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் விஜய். தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என கைகாட்டினார். கட்சி உறுப்பினர் சேர்க்கை, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுப்பது என தவெகவில் விறுவிறுப்பாக வேலை நடந்து வருகிறது.
விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்காக கதவுகளை திறந்துவைத்துள்ளதாக கூறிய நிலையில் விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் இருந்த சி.டி நிர்மல்குமார் என முக்கிய புள்ளிகளை தவெகவுக்கு தட்டித் தூக்கினார் விஜய். கட்சிக்குள் வரும் போதே நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் பிரிவு பொதுச்செயலாளர் என பதவிகளை கையில் கொடுத்தே அழைத்து வந்துள்ளார் விஜய். இதுமட்டுமல்லாமல் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்காக காய்களை நகர்த்தி வரும் இபிஎஸ், விஜய்க்கும் தூது அனுப்பி வருவதாக பேச்சு அடிபட்டது. விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா என அதிமுக நிர்வாகிகளிடம் இபிஎஸ் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அப்படியே கூட்டணிக்கு ஒத்துக் கொண்டாலும், முதலமைச்சர் பதவியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அதிமுகவினர் விடாப்பிடியாக இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அரசியல் களத்தில் சூட்டை கிளப்பி இருக்கிறது. ஆதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் ஆதரவாளராக இருக்கும் நிலையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணிப்பது தங்களது அரசியல் வாழ்க்கைக்கு சரிவருவது போல் தெரிந்ததால் தவெகவில் இணைய முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை பிடிக்காமல் வெளியே வந்த புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் தவெகவில் இணைய வாய்புள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் EPS ஆதரவாளர்களிடம் சூட்டை கிளப்பியுள்ளது.





















