எதுக்குடா வந்திருக்கீங்க? பளார் அறை விடுங்கள்.. தொண்டர்களிடம் கோபம்.. ராமதாசுக்கு என்னாச்சு ?
"வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த தொண்டர்களிடம், மருத்துவர் ராமதாஸ் கோபமாக நடந்து கொண்டதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன"

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில், வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய–சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். மாநாட்டுக்குழு தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.
தலைவர்கள் பேச்சு :
இவ்விழாவில் பேசி அன்புமணி ராமதாஸ், இம்மாநாடு டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மே.11ம் தேதி மாமல்லபுரத்தில், நடைபெற உள்ளது. நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நமக்கும் யாரும் எதிரி கிடையாது. ஏழ்மை, அறியாமை, மது, போதை தான் நமக்கு எதிரி. இதை அழிக்க வேண்டும் என போராடி வருகிறோம். தி.மு.க, இரண்டு சமுதாயத்தை பிரித்து ஆட்சிக்கு வருகிறார்கள். நாம் எல்லோரும் ஒன்று இணைய வேண்டும் என பல்வேறு வேறு விஷயங்களை பேசி இருந்தார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அனைத்து சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரையும் ஒடுக்ககூடாது. இந்தியாவில், 4,694 சாதிகளும், தமிழகத்தில் 364 சாதிகளும் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான். தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். இதனால்தான் சாதிவாரி கணகெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கருத்துகளை முன் வைத்திருந்தார்.
கோபமடைந்த ராமதாஸ்:
இந்த மாநாட்டில் பல்வேறு சமயம் மற்றும் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது அனைவரும் ரத்தின சுருக்கமாக, பேச வேண்டும் என ராமதாஸ் முதலிலே கோபமாக கூறினார். அதன்பிறகு தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மீண்டும் கோபம் அடைந்த, ராமதாஸ் சீக்கிரம் பேசி முடியுங்கள் என்ற தோணியில், அரைநிமிடம் தான் ஒருவருக்கு டைம் எனக் கூறி கோபமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது ஒரு புறம் இருக்க மருத்துவர் ராமதாஸ் பேச ஆரம்பித்த பிறகு, தொண்டர்கள் உற்சாக மிகுதியில் வாழ்க கோஷம் எழுப்பி ஆர்ப்பதித்தனர். தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டதால், 'சத்தம் போட்டால் எழுந்து போய் விடுவேன்', எதுக்குடா வந்திருக்கீங்க? சத்தம் போடவா வந்திருக்கிறீர்கள்? வாயை மூடி 15 நிமிடம் கேளுங்கள்.
சத்தம் போட்டால் நானும் எழுந்து, என்னுடைய பிள்ளைகள், வந்திருக்கின்ற பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என கோஷம் போட்டு விடுவேன் அத்தோடு முடிந்துவிடும். மறுபடியும் கூறுகிறேன் எவன் வாயை திறந்தாலும், பக்கத்தில் இருப்பவர்கள் பளார் என்று ஒரு அறை கொடுங்கள் அதுதான் பரிசு என பேசினார். அதன் பிறகு மருத்துவர் ராமதாஸ் சிரித்துக் கொண்டு சமாளித்தார்.
மருத்துவர் ராமதாஸுக்கு என்னதான் ஆச்சு ?
மருத்துவர் ராமதாஸ் இதுபோன்று எப்போதும் நடந்து கொண்டதில்லை எனத் தொண்டர்கள் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டிற்கும் வரும் தொண்டர்கள் தலைவர்களை பார்க்கும்போது, தொண்டர்கள் ஆர்ப்பரிப்பது இயல்பு. ஆனால் ஏன் மருத்துவர் ராமதாஸ் அவ்வாறு நடந்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. வயது முதிர்வின் காரணமாக அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பாமக நிர்வாகிகளிடம் பேசியபோது: மாநாட்டின் கருத்துக்களை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமய நல்லிணக்க மாநாடு என்பது, முக்கியமான மாநாடு. எனவே கருத்துகளை கேட்காமல், கூச்சல் போட்ட கட்சி தொண்டர்களை உரிமையுடன் தான் அவ்வாறு கூறினார். எங்கள் கட்சியில் நாங்கள் அனைவரும், மருத்துவர் ராமதாசை வழிகாட்டியாக நினைக்கிறோம். அவருக்கு உரிமை இருக்கிறது, மருத்துவர் ராமதாஸ் அதை சிரித்துக்கொண்டே தான் கூறினார் என தெரிவித்தனர்.





















