Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment Cases: தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Child Harassment Cases: தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளிடம் ஆசியர்களே அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன.
அமைதிப்பூங்காவா தமிழ்நாடு?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே சட்ட- ஒழுங்கு சீட்ர்கெட்டு இருப்பதாக. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அரசியல் கட்சி பிரமுகர்கள், பெண்களுக்கு பாலியல் தொல்லை, காவல்துறையினரிடமே செயின் பறிப்பு, காவல் நிலையத்திலேயே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, சமூக ஆர்வலர்கள் கொலை, காவல்துறை உயராதிகாரி மீதான கொலை முயற்சி போன்ற சம்பவங்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் வலுவாக்குகின்றன. இதனால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து உண்மை தானா? என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் தான் ஆசிரியர்களால், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன.
பள்ளிகளில் அத்துமீறும் ஆசிரியர்கள்:
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மூன்று ஆசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது
- திருச்சி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- சேலம் ஓமலூர் பகுதியில் அரசு பள்ளியில் +1 படிக்கும் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக, உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களும் கடந்த ஒரு வார இடைவெளியில் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குமுறும் பெற்றோர்:
பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வியே முதல் மற்றும் முக்கிய கருவி என நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவார்கள் என நம்பிக் கொண்டிருந்தால், அவர்களின் வாழ்க்கையையே சிதைக்கும் செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பெற்றோரை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் ஆபத்துகளில் இருந்து தங்களது பிள்ளைகளை ஆசிரியர்கள் பாதுகாப்பார்கள் என கருதினால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் பள்ளி சென்ற மாணவர்கள், மாலையில் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இதேநிலை தொடர்ந்தால், பெண்கல்வி என்பது பெரும் வீழ்ச்சியை சந்திக்கலாம்.
தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
உதாரணத்திற்காக மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் என்பது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரங்கேறியதாகும். திமுக ஆட்சி கட்டிலில் ஏறிய இந்த நான்கு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை, சிலிமிஷங்களின் பட்டியல் மேலும் நீளும். அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு மாணவிக்கு, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அதைதொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கி சிறப்பு சட்டமும் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
தமிழக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சட்டங்கள் மட்டும் இயற்றினால் மட்டும் போதுமா? என்பதே பொதுமக்கள்ன் கேள்வியாக உள்ளது. பதிவு செய்யப்படும் பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில் காலதாமதம், உரிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அதோடு, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொள்கின்றனரா? குழந்தைகளிடையே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? போக்சோ போன்ற பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மாணவிகளையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என பல கேள்விகள் எழுகின்றன. அண்மையில், புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களையே, பொதுவெளியில் வெளியிட்ட சம்பவங்கள் எல்லாம், அரசு பெண்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகின்றன.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முன்னோடி திட்டங்களை கொண்டு வருவதாக மார்தட்டிக் கொண்டால் மட்டும் போதுமா? பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமின்றி, ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பில்லையா?





















