சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
Champions Trophy: வங்கதேசம் அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்ததன் காரணமாக பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து, இந்தியாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்து விட்டது.
வீணாய் போன பாகிஸ்தான் ஆசை:
பாகிஸ்தானின் கடைசி நம்பிக்கையான நியூசிலாந்தை வங்கதேசம் வீழ்த்தும் என்ற நம்பிக்கையும் வீணானது. இன்று ராவல்பிண்டியில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 236 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கம் காத்திருந்தது.
வில் யங் டக் அவுட்டாகிய நிலையில், வில்லியம்சன் 5 ரன்களுக்கு அவுட்டானார். 15 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகள் விழுந்ததால் வங்கதேசம் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து, கான்வே - ரவீந்திரா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி வந்த நிலையில், கான்வே 30 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
வெற்றியைப் பறித்த ரவீந்திரா:
இதன்பின்பு, ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - டாம் லாதம் ஜோடி ஆட்டத்தை முழுமையாக நியூசிலாந்து பக்கம் எடுத்துக்கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி வங்கதேசத்திற்கும் இருந்தது.
ஆனால், இந்த ஜோடி எந்தவித பதட்டமுமின்றி ஆடினர். குறிப்பாக, ரவீந்திரா மிகவும் நிதானமாக ஆடி பவுண்டரிகளை விளாசி ரன்களை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். சிறப்பாக ஆடி சதம் அடித்த ரவீந்திரா வெற்றியின் அருகில் நியூசிலாந்து அணியை கொண்டு வந்தபோது அவுட்டானார். அவர் ரிஷத் ஹொசைன் பந்தில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 105 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்திருந்தார். ரவீந்திராவுடன் அதிரடியாக ஆடி ஒத்துழைப்பு அளித்த டாம் லாதம் 76 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெளியேறிய பாகிஸ்தான், வங்கதேசம்:
வங்கதேச கேப்டன் ஷாண்டோவும் வெற்றிக்காக டஸ்கின் அகமது, நகித் ராணா, மெஹிதி ஹாசன், முஸ்தபிஷிர் ரஹ்மான், ரிஷத் ஹொசைன் உள்ளிட்டோரை பயன்படுத்தினார். இலக்கு குறைவாக இருந்ததால் நியூசிலாந்து எந்த சிரமுமின்றி ஆடினார்.
வங்கதேசம் தோல்வி அடைந்ததையடுத்து, குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறியது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், வங்கதேசமும் தொடரில் இருந்து 2 தோல்விகளுடன் வெளியேறின.
சோகத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள்:
தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியிருப்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது.
மார்ச் 2ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் குரூப் ஏ-வில் யார் முதலிடம் என்பதை தீர்மானிக்க மோதுகின்றன. இந்த போட்டியின் வெற்றி அரையிறுதியில் எந்த அணி யாருடன் விளையாடுவார்கள்? என்பதைத் தீர்மானிக்கும். இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக முழு மூச்சுடன் ஆடுவார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

