Rahul Gandhi on Vinesh Phogat : "மாஸ் காட்டிய வினேஷ்! டெல்லி வரை கேட்குதா?”எகிறி அடிக்கும் ராகுல்
வினேஷ் போகத்தின் திறமையை பற்றி கேள்வி கேட்டவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கு போட்டி களத்தி வைத்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என பாராட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
பாஜக முன்னாள் எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர். அதில் வினேஷ் போகத்தும் ஒருவர். வினேஷ் போகத் போன்றோர் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போட்டியில் பங்கேற்க திறனற்றவர்கள் எனவும், பாஜகவினர் விமர்சனங்களை அடுக்கினர். இந்நிலையில் தான், வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில், இந்தியா சார்பில் வினேஷ் போகத் பங்கேற்றார். அதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை வீழ்த்தினார். அடுத்த சுற்றில், உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை சாய்த்தார். அரையிறுதியில், கியூபா வீராங்கனை குஸ்மானை வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல், இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை வினேஷ் போகத் நிகழ்த்தினார்.
வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வீழ்த்தி வினேஷ் உடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சிவசப்பட்டது. வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் எண்ணம் மற்றும் திறன்களைக் கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் அவர்களுக்கான பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று அவரது வீர மகளின் முன் சரிந்தது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என கூறியுள்ளார்.