Kanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!
அதிகப்படியான இரைச்சல் உள்ளிட்ட காரணங்களால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா, 97வது ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட பட்டியலில் தேர்வாகி ஆஸ்கர் வரை சென்றது எப்படி? என்பது சிலருக்கு பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
திரையுலகின் கலைஞர்களுக்கு வாழ்நாள் கவுரவமாக கருதப்படும் விருது ஆஸ்கர். இந்த நிலையில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் சயின்சஸ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியான படங்களை அறிவித்துள்ளது. அதில் தமிழில் இருந்து நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியான படங்களில் கங்குவா படமும் இடம்பெற்றிருப்பது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரிலீசான இந்த படத்தின் டீசரும், ட்ரெயிலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், படம் ரிலீசாகிய பிறகு கங்குவா படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. எதிர்மறையான விமர்சனங்களால் கங்குவா படம் படுதோல்வியை அடைந்தது. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்கள் பலரையும் திருப்தியடைய வைத்திருந்தது. பின் ஓடிடியில் ரிலீசான பிறகு கங்குவா படத்தைப் பலரும் பாராட்டினர். தொழில்நுட்ப ரீதியாக கங்குவா படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடும் விமர்சனங்களைச் சந்தித்த கங்குவா தற்போது ஆஸ்கருக்கு பரிந்துரைக்க தகுதியான 207 படங்களில் ஒரு படமாகவும், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கத் தகுதியான ஒரே ஒரு தமிழ் படமாகவும் இடம்பெற்றுள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கலவையான விமர்சனம் பெற்ற திரைப்படம், ஆஸ்கர் வரை சென்றது எப்படி? என்பது சிலருக்கு பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆஸ்கர் விருதுக்காக படக்குழுக்களே நேரடியாகவும் விண்ணப்பிப்பது உண்டு. அப்படி நேரடியாக விண்ணப்பிக்க சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் 50 திரையரங்குகளில், குறைந்தபட்சம் 7 நாட்கள் அந்த திரைப்படம் ஓடியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படமும் சிறந்த படத்துக்கான விருதுக்கு நேரடியாக விண்ணப்பித்து ஆஸ்கர் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்கருக்கான முதற்கட்ட தேர்வுப் பட்டியலில் 324 திரைப்படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி உள்ளது.
தேர்வான முதற்கட்ட திரைப்படங்கள் மீது வரும் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். முடிவுகள் வரும் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்கு முன்பு, சூர்யாவின் சூரரைப் போற்று ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டு முதற்கட்ட பட்டியலில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.