மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி! திருப்பூர் விரையும் போலீஸ்
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் சார் என யாருமே இல்லை என காவல்துறை கூறிக்கொண்டுள்ள நிலையில் ஞானசேகரன் சார் என ஒருவரிடம் பேசியதை மாணவி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஞானசேகரனனுடன் திருப்பூரை சேர்ந்த ஒருவர் இருக்கும் வீடியோ ஒன்று சிக்கி வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் சார் என ஒருவரிடம் செல்போனில் பேசியதாக மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சார் என யாருமே இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகள் யார் அந்த சார் என கேள்வி எழுப்பி கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் மாணவி ஞானசேகரன் சார் என ஒருவரிடம் செல்போனில் பேசியதாக மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் மிரட்டிவிட்டு வந்தேன் என ஞானசேகரன் சாரிடம் கூறியதாகவும் மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து ஞானசேகரனின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர். மேலும் அதில் ஒரு வீடியோவில் ஞானசேகரின் கூட்டாளி ஒருவர் அறியப்பட்டுள்ளார். அந்த நபர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் மேலும் குற்றப்பின்ன்ணி கொண்டவர் என்பதும் முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஞானசேகரின் கூட்டாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரனின் வீட்டில் லேப்டாப் ஒன்றையும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ய அவர் அந்த லேப்டாப்பை பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
சார் என ஒருவரே இல்லை என அதிகாரிகள் கூறிவரும் நிலையில், மாணவியின் உறுதியான தகவல் வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி ஞான சேகரனின் கூட்டாளியை பிடிக்க காவல்துறையினர் திருப்பூர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.