Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Petrol Diesel Shortage: பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி-க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால், அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
எரிபொருள் நெருக்கடியால் பாக்., அரசு முக்கிய நடவடிக்கை
மேற்காசியாவில் நடைபெற்றுவரும் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுடன், வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அரபு நாடுகளின் எண்ணெய் கிடங்குகளை குறி வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
நிலைமையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, அந்நாட்டு ரூபாய் மதிப்பில், பெட்ரோல் விலை 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் தற்போது 321 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதபோல், டீசல் விலையும் 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் டீசல் தற்போது 335 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 16-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் உத்தரவிட்டுள்ளார். அதோடு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனுடன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு வழங்கும் எரிபொருள் சலுகையை 50 சதவீதம் ரத்து செய்வதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதோடு, அரசு அலுவலர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் தவிர, மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறும் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.























