ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கைகளால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்ஷன்
LPG Gas Cylinder Shortage: வணிக சிலிண்டர் தட்டுப்பாடானது ஓட்டல்களின் இயக்கத்தை மட்டுமின்றி, உணவு சிக்கல், ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் என பல மோசமான தொடர் சம்பவங்களுக்கு வழிவகை செய்கிறது.

Gas Cylinder Shortage: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு:
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைகளால், மேற்காசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வணிக சிலிண்டரை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனமும் சிலிண்டருக்கான முன்பதிவுகளை ஏற்பதை நிறுத்தியுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு - ஷாக் தரும் செயின் ரியாக்ஷன்
வணிக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மிகப்பெரிய தொடர் சம்பவங்கள் நம் கண் முன் அணி வகுத்து நிற்கின்றன. பிரதானமாக பொதுமக்கள் தினசரி வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிக்கும், உணவகங்களின் இயக்கத்தில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சார்ந்து இருக்கும் பேச்சுலர்களுக்கான உணவு விநியோகம் தடைபடுவதோடு, பல்லாயிரக்கணக்கான டெலிவெரி பாய்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் உள்ளது. சுப நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
1. மூடப்படும் உணவகங்கள்
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று உணவகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல உணவகங்களிலும் ஒரு நாளைக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்கள் தங்களது வேலை நேரத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ளன. வணிக சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய சூழலே நீடித்தால், நாளைக்குள் சென்னை போன்ற பல பெரிய நகரங்களில் உணவகங்களின் செயல்பாடு முற்றிலும் முடங்கலாம். மின்சார அடுப்பு போன்ற வசதி கொண்ட உணவகங்கள் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தாலும், எல்பிஜி சிலிண்டரை மட்டுமே நம்பி இருக்கும் சிறிய உணவகங்கள் உடனடியாக பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இது உணவு விநியோக சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
2. சாப்பாட்டுக்கே சிக்கல்
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர், உணவிற்காக ஓட்டல்களையே நம்பியுள்ளனர். பல நிறுவனங்களில் மதிய நேரங்களில் விநியோகிக்கப்படும் உணவுகளும் ஓட்டல்களில் இருந்தே ஒப்பந்த அடிப்படையிக்ல் பெறப்படுகின்றன. இந்த சூழலில் உணவகங்கள் மூடப்பட்டால் அதை சார்ந்து இருக்கும் ஒரு பெரிய மக்கள் பிரிவிற்கான உணவு விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம். பற்றாக்குறை காரணமாக விலையும் கடுமையாக உயரக்கூடு. பெருநகரங்களில் உள்ள பேச்சுலர்கள் அதிகம் வசிக்கும் விடுதிகளிலும், வணிக சிலிண்டர்களே பயன்படுத்தப்படுவதால் அங்கும் உணவு சிக்கல் ஏற்படலாம்.
3. வேலை பறிபோகும் அபாயம்:
உணவகங்கள் மூடப்பட்டால் அங்கு தினசரி கூலிக்கு வேலைபார்க்கும் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். அதுபோக ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவிரி நிறுவனங்களில் நாடு முழுவதும் பணிபுரியும் பல லட்சம் பேரும் வேலை வாய்ப்பை இழக்கக்கூடும். இதனால் அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சூழல் நலிவடையக்கூடும். வணிக சிலிண்டர் தட்டுப்பாடானது, தினசரி வருமானத்தை வைத்தே பிழைப்பை ஓட்டும் எளிய மக்களின் தலையில் புதிய இடியாக இறங்கியுள்ளது.
4. சுப நிகழ்ச்சிகளுக்கு சிக்கல்:
பங்குனி மாதம் பிறப்பதற்குள் நல்ல காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என, அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏராளமானோர் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான உணவு தயாரிப்பதற்கும் சிலிண்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவு செய்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Frequently Asked Questions
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதனால் ஏற்படுகிறது?
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களுக்கு என்ன பாதிப்பு?
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படலாம். இதனால் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு, பலருக்கும் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படுமா?
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வணிக சிலிண்டர் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சுப நிகழ்ச்சிகளுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான உணவு தயாரிக்க சிலிண்டர்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் பல லட்சம் செலவு செய்துள்ள நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
























