எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Actors Political Parties: தமிழ்நாட்டில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு நடிகர்கள் ஆற்றிய பங்கே ஆகும். குறிப்பாக, எம்ஜிஆர் அதிமுக-வைத் தொடங்கிய ஆட்சியைக் கைப்பற்றியதே மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
அந்த வரிசையில், தமிழ்நாட்டில் இதுவரை அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1.எம்ஜிஆர் - அதிமுக:
திமுக-வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும், திமுக-வின் எம்எல்ஏ-வாகவும் பொறுப்பு வகித்த எம்ஜிஆர் பின்னாளில் கருணாநிதியுடனான மோதல் காரணமாக அதிமுக-வைத் தொடங்கினார். 1972ம் ஆண்டு கட்சியைத் தொடங்கிய எம்ஜிஆர் பின்னர் 3 முறை அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றினார். அவரே தமிழ்நாட்டில் நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கான உத்வேகம் ஆகும்.
2. சிவாஜி - தமிழக முன்னேற்ற முன்னணி:
தொடக்க காலம் முதல் காங்கிரசில் தீவிரமாக இருந்து வந்த சிவாஜி எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு 1988ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். ஆனால், அவரால் திரையுலகில் பெற்ற வெற்றியை சினிமாவில் பெற இயலவில்லை. திருவையாறு தொகுதியில் அடைந்த தோல்வியால் சிவாஜி அரசியலையே விட்டு ஒதுங்கினார்.
3. பாக்யராஜ் - எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்:
எம்ஜிஆரால் தனது சினிமா வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ். பாக்யராஜும் வெற்றிகரமான இயக்குனர், நடிகராக உலா வந்து கொண்டிருந்தபோது எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தை 1989ம் ஆண்டு தொடங்கினார். ஆனால், திரையுலகில் பெற்ற வெற்றியை அவரால் கட்சியில் பெற இயலவில்லை. எம்ஜிஆர் சினிமா வாரிசு என்று கூறியும் அவரால் வாக்குகளைப் பெற இயலவில்லை. பின்னர், கட்சியை கலைத்துவிட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
4. டி.ராஜேந்தர் - லட்சிய திமுக:
மக்கள் மத்தியில் நடிகராகவும், இயக்குனராகவும் புகழ்பெற்ற டி.ராஜேந்தர் 1991ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகத்தை தொடங்கினார். பின்னர், திமுக-வில் இணைந்து திமுக எம்.எல்.ஏ. ஆனார். 2004ம் ஆண்டு பின்னர், திமுக-வில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திமுக-வைத் தொடங்கினார். ஆனால், அவரால் லட்சிய திமுக-வை வெற்றிகரமாக நடத்த இயலவில்லை.
5. விஜயகாந்த் - தேமுதிக:
எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலில் ஓரளவு வெற்றிக் கொடி நாட்டியது விஜயகாந்த் மட்டுமே ஆவார். 2004ம் ஆண்டு தேமுதிக-வைத் தொடங்கிய அவர் முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தார். அதன்பின்பு, அவரது உடல்நல சரிவால் தேமுதிக-வும் சரிந்தது.
6. சரத்குமார் -சமத்துவ மக்கள் கட்சி:
சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிரபலமான சரத்குமார் திராவிட கட்சிகளில் மாறி, மாறி செயல்பட்ட நிலையில், அவர் 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். ஆனால், சமத்துவ மக்கள் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி கட்சியை பாஜக-வுடன் இணைத்து தன்னையும் பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.
7. கார்த்திக் - அஇ நாடாளும் மக்கள் கட்சி
தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகராக உலா வந்த நடிகர் கார்த்திக், அனைத்திந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் பணியாற்றிய நிலையில், 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்னர், 2018ம் ஆண்டு அந்த கட்சிக்கு பதிலாக மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கினார்.
8. சீமான் - நாம் தமிழர்:
ஈழப்போருக்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து உருவாக்கப்பட்ட கட்சி நாம் தமிழர். சீமான் 2010ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தேர்தல் களத்தில் போட்டியிட்டு வருகிறார். இதுவரை ஒரு தேர்தலில் கூட இவர்கள் வெற்றி பெறாவிட்டாலும் இவர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்தே வருகிறது.
9. கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை:
தமிழில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை தொடங்கினார். அதிமுக-வுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ-வாக பதவி வகித்த இவர் தற்போது திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளார்.
10. கமல்ஹாசன்- மக்கள் நீதிமய்யம்
உலகநாயகன் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் 2018ம் ஆண்டு மக்கள் நீதிமய்யத்தை தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலிலே மக்கள் நீதிமய்யம் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, திமுக-வுடன் நெருக்கமான உறவு கொண்ட இவர் தற்போது திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பி-யாக பொறுப்பேற்றுள்ளார்.
11. விஜய் -தமிழக வெற்றிக் கழகம்:
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகரகளைக் கொண்ட நடிகர் விஜய், கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக தனித்து போட்டியிட உள்ள விஜய்க்கு முதல் தலைமுறை, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இவர்கள் தவிர நெப்போலியன், ராதாரவி, எஸ்.வி.சேகர், விந்தியா, குஷ்பு, நமீதா என பல திரைப்பிரபலங்களும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.























