(Source: ECI/ABP News/ABP Majha)
Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!
போட்டியிட வேண்டும்.. போட்டியிட வேண்டாம் என ராமதாஸும், அன்புமணியும் கயிற்றை மாறி மாறி இழுத்துக்கொண்டிருந்த நிலையில், விக்ரவண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது தான் பாமகவின் கொள்கை, கடந்த கால் தேர்தல் வரலாறுகளும் அதை தான் சொல்கிறது. அப்படி இருக்கையில் இந்த முடிவுக்கு பிண்ணனியில் அன்புமணியின் அழுத்தம் காரணமாகவே இறுதியாக ராமதாஸ் ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ராமதாஸ் பலமுறை மறுத்ததாகவும், ஆனால் பிடிவாதமாக பாஜக கூட்டணிக்கு தான் செல்ல வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியதால் தான் இறுதியில் பாமக பாஜக கூட்டணியில் இடம் பெற்றது என்று அப்போதே பேசபட்டது.
இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தங்களுடைய வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது, அதிமுகவும் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளரான பன்னீர்செல்வத்தை கலமரக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் அண்ணாமலை வெளியிட்டு அறிவிப்பில் “தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்”
இந்த அறிவிப்புக்கு முன் தைலாபுரத்தில் நடந்த பாமகவின் உட்கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஆளுங்கட்சி முழு பண பலத்தோடும் அரசு இயந்திரத்தின் உதவியோடும் களமிறங்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சி தொண்டர்களை உற்சாகமாக வைக்க வேண்டும் என்றால் நாம் இந்த தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இறுதியாக அன்புமணி போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி ராமதாஸ் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.