Kodaikanal flowers : கொஞ்சம் ரசிங்க பாஸ்.. கொடைக்கானல் A to Z
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து லட்சக்கணக்கான வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் வீட்டில் இருந்தே கண்டு ரசிக்கும் விதமாக யூ-டியூப் சேனல் மூலம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடந்தோறும் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம், மேலும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும்,பூங்காவில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசிக்க வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம், இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக ஆயிரக்கணக்கான மலர் நாற்றுகள் ஊட்டி, பெங்களூர் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வந்த நிலையில் , பூச்செடிகள் அனைத்தும் நன்கு வளர்ந்த நிலையில் பூக்களும் பூத்துக்குலுங்குகின்றன , தற்போது சால்வியா, டெல்பிணையம், ஆன்ரினியம் , பேன்சி, பெட்டுனியா, லில்லியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. மேலும் இதே போன்று ரோஜா பூங்காவில் சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், ஈபிள் டவர், கிலோட் கிஸ் அப் பையர் உள்ளிட்ட 1500 வகையான ரோஜா பூக்களின் வகைகளில் 16,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன, இதே போல செட்டியார் பூங்காவிலும் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காங்களில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் பூங்காக்களில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களை தோட்டக்கலை துறையினர் யூ-டியூப் சேனல் மூலம் இணையத்தளத்தில் PARKS AND GARDENS - KODAIKANAL என்ற தளம் வழியாக வீடியோவாக பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளனர் மேலும் கொடைக்கானலில் உள்ள மூன்று பூங்காக்களையும் கழுகு பார்வையில் காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டில் இருந்த படியே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்ததன் எதிரொலியாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கொடைகானலிலும் சுற்றுலா பயணிகளுக்கு வருகை தடை செய்யப்பட்டது இந்நிலையில் கண்களை கவரும் பூக்கள் , பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மலைகளின் அழகு என நேரில் சென்று பார்க்க வேண்டியதை, வீடியோ காட்சிகளால் தற்போது இணையதலம் மூலமாக காண்பது சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு வரவேற்பு இருக்கும் என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.