கணவர் உயிரிழந்தாலும் பெண்ணுக்கு வீட்டில் உரிமை உண்டு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
ஒரு பெண் புகுந்த வீட்டில் வசிக்கும்போது எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டால், பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் வாழ உரிமை உண்டு என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவர் உயிரிழந்தாலும் அந்த பெண்ணை கணவர் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்ற முடியாது என்பதையும் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவர் உயிரிழந்த பிறகு, மாமனார், மாமியார் வீட்டில் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி வழக்கு தொடுத்திருந்தார். 2009ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு, அதே வீட்டில் இருந்து உறவினர்கள் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயல்வதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுவே வழக்கின் புகார் மனு. முதலில் இந்த வழக்கை விசாரித்த பாலக்காடு நீதிமன்றம் ஏற்கனவே இந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து மனுதாரரின் கணவரின் உறவினர் மேல்முறையீடு செய்தார். கேரள உயர் நீதிபதி எம்.பி.சினேகலதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் அந்த உறவினர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் , அந்தப் பெண் தனது மனுவில், கணவர் இறந்த பிறகு, மாமியார் மற்றும் மாமனார் இணைந்து தன்னை துன்புறுத்தியதாகவும், வீட்டிற்குள் நுழைய விடாமல் இருந்ததாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் கீழ் நீதிமன்றத்தில் அந்த பெண் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவர் இறந்ததால் அந்தப் பெண்ணுக்கும் மாமியாரும் எந்தவொரு உறவும் இல்லை எனச் சொல்லி பெண்ணுக்கு எந்தவொரு நிவாரணம் வழங்க முடியாது என மறுத்துவிட்டது. ஆனால், இதை எதிர்த்து அந்த பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அங்குத் தீர்ப்பு மாற்றி வந்தது.
அந்தப் பெண்ணுக்குச் சொந்தமாகச் சொத்து இருப்பதாகவும், அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறிய உறவினர்கள், இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்ட நபர் எனக் கூறி முறையிட்டனர். இருப்பினும், வாதங்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண் இறந்தவரின் மனைவி என்றும் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தவர் என்பதையும் குறிப்பிட்டனர். இதனால் இந்த வழக்கில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும் என்று கூறினர். மேலும், அந்த வீட்டில் வசிப்பதற்கான உரிமை அந்த பெண்ணுக்கு இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் நீதிபதிகள், ஒரு பெண்ணின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இந்த உரிமை மிகவும் முக்கியமானது. குடும்ப வன்முறையினால் அவர் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதே இந்த தீர்ப்பு என்றார்.





















